`மெழுகுவர்த்தி கிடைக்கல; புதிய சின்னம் கிடைக்கும்வரை இப்படிப் பிரசாரம் செய்யுங்கள்!'- தொண்டர்களுக்கு சீமான் அறிவுரை | seeman advice to his party members regarding symbol

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:22 (16/03/2019)

`மெழுகுவர்த்தி கிடைக்கல; புதிய சின்னம் கிடைக்கும்வரை இப்படிப் பிரசாரம் செய்யுங்கள்!'- தொண்டர்களுக்கு சீமான் அறிவுரை

``மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது புதிய சின்னம் வழங்கக்கோரி ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். இதனால் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார்.

சீமான்

``கடந்த 2016-ம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். பல ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த தேசிய, திராவிடக் கட்சிகளை எதிர்த்து, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்டது. புதிய சின்னத்தையும் கட்சிக் கொள்கைகளையும் தேர்தல் வரைவுத் திட்டங்களையும் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்க நான் தொடர் பரப்புரையில் ஈடுபட்டேன். அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 1.1% வாக்குகளைப் பெற்று மாற்றத்திற்கான விதையினை தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஊன்றியது. 

வாக்குக்கு அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தல்களிலும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலிலும் துணிந்து களத்தில் நின்று மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து நடைபெற்ற ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு 3,860 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கொள்கையில் எவ்வித தொய்வின்றி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்

மேலும், இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்தேன். இந்தத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கம்போல் மெழுகுவத்தி சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாகக் கோரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People’s Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சிக்கு மெழுகுவத்தி (Candles) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதே சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராவணன், மாநிலச் செய்திப் பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரபு ஆகியோர் கொண்ட குழு டெல்லிக்கு நேரில் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக் கோரியுள்ளனர். இன்று (13-03-2019) நாம் தமிழர் கட்சிக்குப் புதிய சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மெழுகுவத்தி சின்னத்துடன் சீமான்

எனவே, மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியானதால் தேர்தல் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனவும். புதிய சின்னம் கிடைக்கப்பெறும்வரை நமது கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் செயற்பாட்டு வரைவுத் திட்டங்களையும் எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபட வேண்டும்" என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.


[X] Close

[X] Close