ராகுல் காந்தியின் கவனத்திற்கு! - 7 பேர் விடுதலை தொடர்பாக சில கேள்விகள் | Rajiv Gandhi convict Perarivalan questioned about the release

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:23 (16/03/2019)

ராகுல் காந்தியின் கவனத்திற்கு! - 7 பேர் விடுதலை தொடர்பாக சில கேள்விகள்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 28 வருடங்களாக பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். 

இவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. பரிந்துரை அனுப்பி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பும் பேரறிவாளன் தரப்பினர்

அவர் உடனடியாக விடுதலைக் கோப்பில் கையொப்பமிட வேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் அவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர், தமிழகத்தின் 7 நகரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருந்தும் 7 பேரின் விடுதலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதற்கிடையே 7  பேரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் வழக்கறிஞர் சிவக்குமார் நம்மிடம் பேசியதாவது,

 ``பேரறிவாளன் இன்றைக்குச் சிறையில் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் அவர் அளித்த வாக்குமூலம்தான். ஆனால், அந்த வாக்கு மூலத்தைப் பதிவு செய்த தியாகராஜன் ஐ.பி.எஸ் `நான் வாக்கு மூலத்தைத் தவறாகப் பதிவு செய்துவிட்டேன், அதைச் சரியாகச் செய்திருந்தால் தற்போது பேரறிவாளன் நிச்சயம் வெளியில் இருந்திருக்க வாய்ப்புள்ளது’ என உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார். 

பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், `நாங்கள் வழங்கிய தீர்ப்பு பிழையானது. தவறான தீர்ப்பை வழங்கிவிட்டோம் இதை மீளாய்வு செய்யப்படவேண்டும்’ எனக் கூறியுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பல்நோக்கு விசாரணைக் குழு என்ற ஒன்றை ஆரம்பித்தனர். ஆனால், அது இன்று வரை செயல்படாமல் உள்ளது. அதில் எந்த விசாரணையும் சரிவர நடைபெறவில்லை. 

அடுத்து மிக முக்கியமாக ராஜீவ் காந்திக்கு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பெல்ட் பாம் பற்றிய விசாரணை இன்று வரை தொடங்கப்படவில்லை. பாம்  பற்றிய மூலத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்குப் பதிவு செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கான நீதி மட்டுமல்லாமல் ராஜீவ்காந்தி கொலைக்கும் சேர்த்து நீதிகேட்டுள்ளார். 

7 பேரின் விடுதலையில் எனக்கும், என் தங்கை மற்றும் தாய்க்கும் எந்த வித ஆட்சேபமும் இல்லை என ராகுல் காந்தி இரண்டு முறை தெரிவித்துவிட்டார். ஆனால், அவர்களின் கட்சியில் உள்ள ஒரு சிலர் தொடர்ந்து விடுதலைக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதில் ராகுல்காந்தி மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.  


[X] Close

[X] Close