அழிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள்! - களத்தில் இறங்கிய கரூர் கலெக்டர் | Karur Collector's Action in clearing political ads

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:23 (16/03/2019)

அழிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள்! - களத்தில் இறங்கிய கரூர் கலெக்டர்

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றும்  பணியை, கரூர் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அன்பழகன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்தது. எனவே, சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல்கட்சிகளின் விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், கோயம்புத்தூர் - சேலம் புறவழிச்சாலை ரவுண்டானா, மேற்கு பிரதச்சனம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அன்பழகன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

'அரசியல் கட்சியினர், பொது இடங்களில் தங்கள் கட்சி தொடர்பான விளம்பரங்கள் உள்ளதை தாமாக முன்வந்து அழித்திட வேண்டும்' என்றும், 'அவ்வாறு சுவர் விளம்பரங்களை அழிக்காத இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குறிய கட்டணம், அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்' என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரத்தை அழித்த கலெக்டர்

அதோடு, 'நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், எவ்வித பேனர் மற்றும் சுவர் விளம்பரங்களுக்கும் அனுமதி கிடையாது. ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரின் அனுமதிபெற்று, சுவர் விளம்பரம் மட்டும் செய்துகொள்ளலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவித்திட, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close