``தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்கிறோம்!" - போராட்டத்தை வாபஸ்பெற்ற விவசாயிகள் | Farmers stop the protest at kumarapalayam

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:23 (16/03/2019)

``தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்கிறோம்!" - போராட்டத்தை வாபஸ்பெற்ற விவசாயிகள்

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி, கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவந்த விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குவந்தது. 

விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது, தேசிய நெடுஞ்சாலையோரங்களில் புதைவடக் கம்பிகளில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  நாமக்கல் மாவட்டத்துக்குட்பட்ட குமாரபாளையத்தை அடுத்த படைவீடு, சாமண்டூரில், கடந்த 3-ம் தேதி முதல் 10 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

'பவர்கிரிட் நிறுவனம்',  விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குப் பதிலாக சாலை ஓரங்களில் புதைவடக் கம்பிகளைப் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கெனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு, உயர்மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகை வழங்கிட வலியுறுத்தியும், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சென்றார். 'கேபிள் மூலம் மின்சாரம் என்பது சாத்தியமில்லை. நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொடுப்பது தொடர்பாக, தேர்தல் முடிந்த பிறகு தெரிவிக்கப்படும்' என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உண்ணா விரதப் போராட்டத்தை முடித்த விவசாயிகள்

மக்களவைத் தேர்தல் முடியும் வரை இந்த திட்டப் பணிகளை நிறுத்தக் கோரி, நேற்று உடலில் வேப்பிலையை கட்டிக்கொண்டு உண்ணாவிரதப் பந்தலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இந்நிலையில்,  உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த ம.தி.மு.க பொருளாளர் அ.கணேசமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விவசாயிகள் ஏ.எம்.முனுசாமி, பி.பெருமாள், வி.பி.குணசேகரன் உள்ளிட்டோருக்கு தர்ப்பூசணி பழம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். வரும் 14-ம் தேதி, திருப்பூரில் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்குபெறும் ஆர்ப்பாட்டத்தை  நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close