பாம்பன் பாலத்தில் இரவில் பற்றி எரிந்த மின்சார கேபிள்கள்! - துரிதகதியில் செயல்பட்ட இளைஞர்கள் | A fire broke out at Pamban Road Bridge: Electric Cables Destroyed

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:50 (13/03/2019)

பாம்பன் பாலத்தில் இரவில் பற்றி எரிந்த மின்சார கேபிள்கள்! - துரிதகதியில் செயல்பட்ட இளைஞர்கள்

பாம்பன் கடல்மீது அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலத்தின் வழியாகச் செல்லும் மின்சார கேபிள்களில் திடீரென தீ  விபத்து ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மண்டபத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில், பாம்பன் கடல்மீது சாலைப் பலம் அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பெயரில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் வழியாக ராமேஸ்வரம் தீவுக்கு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்தப் பாலத்தின் இரு புறங்களிலும் மின்சாரம், தொலைத் தொடர்பு இணைப்புகளுக்கான கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதே போல், காவிரி குடிநீர் குழாய்களும் இந்தப் பாலத்தின் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.

பாம்பன் சாலைப் பாலத்தில் மின் கேபிள்களில் தீ விபத்து

இந்நிலையில், நேற்று இரவு பாலத்தின் தென் பகுதி ஓரங்களில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்களில் திடீரெனத் தீ பற்றியது. இதனைக் கண்ட மீனவ இளைஞர்கள், இதுகுறித்து பாம்பன் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். மேலும், தீவு பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் எடுத்துச்சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகளை உடைத்து, அதனுள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால், தீ மின்சார கேபிள்களில் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பைத் துண்டித்தனர்.  திடீர் தீ விபத்தினால், எரிந்துபோன மின்சார கேபிள்களை மாற்றும் பணியில் மின்சார ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டனர்.  இதேபோன்று, கடந்த ஆண்டும்  சாலைப் பாலத்தில் பதிக்கப்பட்டிருந்த மின்சார கேபிள்களில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close