`தலைவலிக்குதுன்னுதான் சொன்னாள்; என் மகள் இறந்துட்டா!' - மாணவியின் உடல்உறுப்புகளை தானம் செய்த தந்தை | 12 year old girl's organs donates after dead near chittoor

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/03/2019)

கடைசி தொடர்பு:15:40 (13/03/2019)

`தலைவலிக்குதுன்னுதான் சொன்னாள்; என் மகள் இறந்துட்டா!' - மாணவியின் உடல்உறுப்புகளை தானம் செய்த தந்தை

கடுமையான தலைவலியால் திருப்பதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், திருப்பதி வைகுண்டபுரம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி. தனியார் கல்லூரி ஊழியர். இவரின் மனைவி ஷைலஜா. இவர்களது மகள் லிகிதா (12). 8-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் லிகிதாவுக்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டது. உடனடியாக மகளை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் பெற்றோர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை (13-ம் தேதி) 8 மணிக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. பெற்றோர் கதறி அழுதனர். பின்னர், மனதைத் தேற்றிக்கொண்டு மகளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். 

கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகத்தை சி.எம்.சி மருத்துவமனை தானமாக பெற்றுக்கொண்டது. மற்றொரு சிறுநீரகம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கும், கல்லீரல் ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தானமாக அனுப்பப்பட்டன. இதுபற்றி மாணவியின் தந்தை கூறுகையில், ``நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மகள் தலை வலிப்பதாகக் கூறினாள். இரவு தலைவலி அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதித்தோம். மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது என்று கைவிரித்தனர். இந்த உலகத்தைவிட்டு மகள் மறைந்தாலும், உடல் உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் அவள் வாழ்ந்துகொண்டிருப்பதாக மனதைத் தேற்றிக்கொள்கிறோம்’’ என்றார் மீளமுடியாத துயரத்தோடு.


[X] Close

[X] Close