நேர்காணலில் விஜயகாந்த்தை கண்கலங்க வைத்த நிர்வாகி! | vijayakant tears in dmdk meeting

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:25 (16/03/2019)

நேர்காணலில் விஜயகாந்த்தை கண்கலங்க வைத்த நிர்வாகி!

நேர்காணல் நடத்திய விஜயகாந்த்   


தே.மு.தி.க சார்பில் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்தினார். அப்போது நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, `தேர்தலில் போட்டியிட வரவில்லை, உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட விஜயகாந்த் கண்கலங்கியுள்ளார். 

 நீண்ட இழுபறிக்குப் பிறகு, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுப்பதாக ஒப்பந்தமாகியுள்ளது. தே.மு.தி.க சார்பில் 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. இதில் பங்கேற்க நெல்லை மாவட்டத்திலிருந்து தே.மு.தி.க நிர்வாகிகள் வந்திருந்தனர். 

நேர்காணலில் விஜயகாந்த்

நேர்காணலை விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர். அப்போது, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமதுஅலி, நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, கிழக்கு மாவட்டச் செயலாளர் வக்கீல் ஜெயபாலிடம் நேர்காணல் நடந்தது. தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலச் செயலாளர் சிவானந்தபெருமாளிடம் நேர்காணல் நடந்தது. இதையடுத்து தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணியிடம் நேர்காணல் நடந்தது. 

 நேர்காணல் அறைக்குச் சென்ற ஆனந்தமணியிடம் நேர்காணல் குழுவினர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஆனந்தமணி, `நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட விஜயகாந்த், கண்கலங்கியபடி சிரித்துள்ளார். அதோடு, `உங்களைப் போன்றவர்களால்தான் நான் நலமாக இருக்கிறேன். தே.மு.தி.க-வும் பலமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். 

நேர்காணலில் விஜயகாந்த்

இதையடுத்து 40 தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்துவருகிறது. இந்த நேர்காணலின்போது பிரேமலதா விஜயகாந்த் இல்லை. அவர், நெல்லையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள கோயிலில் சாமிதரிசனம் செய்ய சென்றிருப்பதாகக் கட்சியினர் தெரிவித்தனர். 

நேர்காணலில் பங்கேற்ற தே.மு.தி.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலை விஜயகாந்த் நடத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி. சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவரின் பேச்சை நீண்ட நாள்களுக்குப் பிறகு கேட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கம்போல நேர்காணலில் கேள்வி இருந்தது. தொகுதி நிலவரம், எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று நிர்வாகிகள் கேட்டனர். அதற்கு நாங்கள் பதிலளித்தோம்’’ என்றனர். 

நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கல்விச் சான்றிதழ், தனித்தொகுதி என்றால் அதற்கான சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி நேர்காணலில் பங்கேற்றவர்கள் கல்விச் சான்றிதழ் அடங்கிய பயோ டேட்டாவை கொண்டு வந்திருந்தனர். உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பூத் என்ற கேள்வியும் நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது என்னென்ன தொகுதிகள் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் கள்ளக்குறிச்சி, விருதுநகர், வடசென்னை, திருச்சி என்ற தகவல் முதலில் வெளியானது. தற்போது விருதுநகர் தொகுதிக்குப் பதில் கிருஷ்ணகிரி என்ற தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க போட்டியிட உள்ள 4 தொகுதிகளுக்கு விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டன. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் தே.மு.தி.க-வின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் விஜயகாந்த் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  


[X] Close

[X] Close