பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தஞ்சை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பதுங்கல்!- மாதர் சங்கத்தினர் தகவல் | Convict of pollachi rape case are staying in thanjavur admk members house

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (13/03/2019)

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தஞ்சை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பதுங்கல்!- மாதர் சங்கத்தினர் தகவல்

``தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி பயங்கரத்தில் இதுவரை நான்கு பேர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இதில் தொடர்புடைய பலரை காவல்துறையினர் கைது செய்யாமல் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தஞ்சாவூரில் உள்ள அ.தி.மு.க பிரமுகரின் கட்டுப்பாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களைக் கைது செய்யவில்லை என்றால் அந்தப் பிரமுகரின் வீட்டை முற்றுகையிடுவோம்'' என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி தனியாக வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி அந்தப் பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைகள் செய்து வந்த செய்திகள் வெளியாகி தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவர்களைக் காப்பாற்ற முயற்சிகள்  நடப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பெருங்குரலெடுத்துப் பேசப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி பயங்கரத்தில் 20 பேர் வரை ஈடுபட்டுள்ளனர். இதில் நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஆரம்பத்தில் இருந்தே காப்பதிலேயே போலீஸார் குறியாக இருந்தனர். மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை இதுவரை கண்டுகொள்ளவில்லை. மகளிர் ஆணையத்தினர் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக பேசி உறுதுணையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்'' என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி கூறுகையில், பொள்ளாச்சி சம்பவத்தில் இருபது பேர் வரை ஈடுபட்டுள்ளனர். ஆனால், நான்கு பேரை மட்டும் கைது செய்துள்ள காவல்துறை அவர்களோடு வழக்கை முடிக்கப் பார்க்கிறது. இதில் ஈடுபட்ட மற்றவர்கள் தஞ்சாவூரில் உள்ள அ.தி.மு.க பிரமுகரின் கட்டுப்பாட்டில் தஞ்சமடைந்து பதுங்கியுள்ளனர். அந்தப் பிரமுகர் அவர்களைக் காப்பாற்றி வருகிறார். தஞ்சை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த சமயத்தில் பொள்ளாச்சியிலிருந்து தேர்தல் பணிகள் பார்ப்பதற்கு இந்த க்ரூப் வந்தது. அப்போதில் இருந்தே அவர்களுக்கும் தஞ்சாவூர் பிரமுகருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் `பார்' நாகராஜன் என்பவரை அ.தி.மு.க தலைமை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.

தஞ்சை அ.தி.மு.க பிரமுகரும் `பார்' நாகராஜும் அமைச்சர் ஒருவருடன் இருக்கும் போட்டோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. `பார்' நாகராஜ் மற்றும் சிலர் தஞ்சாவூரில் அ.தி.மு.க பிரமுகரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீடும் எங்களுக்குத் தெரியும். காவல்துறையினர் இதை உதாசினப்படுத்தாமல் விசாரித்து தஞ்சையில் தங்கியிருப்பவர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அந்த நபர்கள் தங்கியிருக்கும் வீட்டை முற்றுகையிடுவோம். மேலும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close