`லேட்டா வந்தாரு ஓங்கி அடித்தேன்'!- முதியவர் கொலையில் சிக்கிய சூப்பர்வைஸர்  | old man killed by supervisor for coming late to work

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (13/03/2019)

கடைசி தொடர்பு:16:11 (13/03/2019)

`லேட்டா வந்தாரு ஓங்கி அடித்தேன்'!- முதியவர் கொலையில் சிக்கிய சூப்பர்வைஸர் 

கொலை

மதுரவாயலில் செயல்படும் மதுபான பாரில் வேலை பார்க்கும் முதியவரிடம் ஏன் லேட் என்று ஓங்கி அடித்த சூப்பர்வைஸர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை மதுரவாயலில் அரசு மதுபானக் கடை செயல்படுகிறது. கடையையொட்டி பார் உள்ளது. இந்த பாரில் மதுரவாயலைச் சேர்ந்த மகேந்திரன் (60) என்பவர் வேலை பார்த்துவந்தார். அதே பாரில் ராஜா என்பவர் சூப்பர்வைஸராக பணியாற்றிவருகிறார்.  இந்த நிலையில், மகேந்திரன், வேலைக்குத் தாமதமாக வந்துள்ளார். அதை ராஜா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆத்திரத்தில் மகேந்திரனை ஓங்கி அடித்துள்ளார் ராஜா. இதனால், மகேந்திரன் மயங்கி விழுந்துள்ளார். அதை ராஜா, கண்டுகொள்ளவில்லை.  நீண்ட நேரமாகியும் மகேந்திரனுக்கு மயக்கம் தெளியவில்லை. இதனால் பதறிப்போன பார் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், மகேந்திரன் இறந்துவிட்டதாகக் கூறினர். 

 கொலை

இந்தத் தகவல் மதுரவாயல் போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மகேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மகேந்திரன் மரணத்துக்கான காரணத்தை போலீஸார் விசாரித்தனர். அப்போது மகேந்திரனை சூப்பர்வைஸர் ராஜா அடித்த தகவல் தெரியவந்தது. இதனால் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், `ஒரே ஒரு அடிதான் அடித்தேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, மகேந்திரனைக் கொலை செய்த குற்றத்துக்காக ராஜாவை போலீஸார் கைது செய்தனர்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களின் முதற்கட்ட விசாரணையில் மகேந்திரனுக்குச் சொந்தம் என சொல்லிக்கொள்ள யாருமில்லை. இந்த பாரிலேயே அவர் வேலை பார்த்துவந்துள்ளார். பிளாட்பாரத்தில் தங்கிவந்த மகேந்திரன், மயக்கம் அடைந்தவுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார். ஆனால், நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த அவர் இறந்துவிட்டார். மகேந்திரனை ராஜா அடிக்கும் வீடியோ காட்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் அவரை கைதுசெய்துள்ளோம்"என்றனர். 


[X] Close

[X] Close