`தெரியாத விஷயத்தை என்னிடம் கேட்காதீர்கள்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் இல.கணேசன் பதில் | "I do not know whats happening in Pollachi" says ila.Ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (13/03/2019)

கடைசி தொடர்பு:16:30 (13/03/2019)

`தெரியாத விஷயத்தை என்னிடம் கேட்காதீர்கள்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் இல.கணேசன் பதில்

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, ``அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. எனக்குத் தெரியாது’’ என்று பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ராகுல்காந்தி தமிழகம் வந்திருக்கிறார். அவரால், இங்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ராகுல் எங்கெல்லாம் சென்று பேசுகிறாரோ... அங்கெல்லாம் மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மக்கள் மாறுகிறார்கள். ராகுல்காந்தி பிரசாரம் செய்தாலே போதும், மோடி வெற்றிபெற்றுவிடுவார். ராகுல் அபத்தமான கருத்துகளை மக்கள் முன்வைப்பார். இதுதான் அவருடைய சரக்கு என மக்கள் புரிந்துகொள்வார்கள். ராகுலுக்கு சமமாகப் பேசுவதற்கு, தமிழகத்தில் ஒருவர் இருக்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற முயற்சி மேற்கொள்கிறோம்.

கடந்த முறை யார் யாரெல்லாம் வெற்றிபெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாகக் கூட்டணி அமைத்திருக்கிறோம். பா.ம.க ஒரு தொகுதி, பா.ஜ.க ஒரு தொகுதி, மற்ற அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது. இப்போது நாங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து மீண்டும் வெற்றிபெறுவோம். கடந்த முறை மோடி இதைச் செய்வார், அதைச் செய்வார் என்று வாக்குறுதிகளைச் சொல்லி வாக்கு கேட்டோம். இந்த முறை 5 ஆண்டுக்காலம் நாங்கள் வாழ்ந்துகாட்டியதைச் சொல்லி வாக்கு கேட்போம்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் விவகாரம் செய்யப்பட்ட விவகாரம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘எனக்கு அந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. அதுபோன்ற செய்திகளை நான் ஆழமாகப் படிப்பதில்லை. தெரியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்’’ என்று கூறினார்.

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான இல.கணேசன், ‘அதுபற்றி னக்கு எதுவுமே தெரியாது’ என்று சொல்லியிருப்பது, பொதுமக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியது.


[X] Close

[X] Close