நீதி கேட்டுப் போராடிய பொள்ளாச்சி மாணவர்கள் - பெண்கள் என்றும் பாராமல் தரதரவென இழுத்த போலீஸ்! | Student protest in Pollachi against sexual abusers

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (13/03/2019)

நீதி கேட்டுப் போராடிய பொள்ளாச்சி மாணவர்கள் - பெண்கள் என்றும் பாராமல் தரதரவென இழுத்த போலீஸ்!

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, போலீஸார் கலைத்தனர்.

மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொள்ளாச்சி  பாலக்காடு சாலையில் இருக்கக்கூடிய நீதிமன்ற குடியிருப்பு வளாகம் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கில் தவறு செய்து கைது செய்யப்படாமல் இருக்கும், கெரோன், `பார்' நாகராஜ் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளின் மொபைல்களில் டெலிட் செய்யப்பட்ட வீடியோக்களை ரெக்கவரி செய்து, அந்த வீடியோக்களில் உள்ள நபர்களையும் கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காலை முதலே, மாணவர்களின் போராட்டத்தைக் கலைக்க போலீஸார் முயற்சி செய்து வந்தனர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதையடுத்து, கோவை எஸ்.பி. பாண்டியராஜன் போராட்டக் களத்துக்கு வந்தார். மாணவர்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்து, காவல்துறையைக் கண்டித்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதையடுத்து, போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதுவும் பலனளிக்கவில்லை. இதனால், போலீஸார் மாணவர்களைக் குண்டுகட்டாக தூக்கி போராட்டத்தைக் கலைத்தனர். பெண்கள் என்று கூட பாராமல் போலீஸார் அவர்களை தரதரவென இழுத்துச் சென்ற செயல் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close