``முகிலன் விவகாரத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய முடிவு" - ஹென்றி திபேன்! | soon will file affidavit in mugilan case says human rights activist

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (13/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (13/03/2019)

``முகிலன் விவகாரத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய முடிவு" - ஹென்றி திபேன்!

 முகிலன்

காணாமல் போன முகிலன் குறித்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யப் போவதாக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த மாதம் 15-ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் காணாமல் போனார். 

மக்கள் போராட்டங்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் என்பதால் யாராவது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. அதைத்  தொடர்ந்து அவரை ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முகிலன் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ரயில்வே போலீஸ் மற்றும் தமிழக போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. முகிலன் காணாமல் போய் ஒரு மாதம் ஆன நிலையில், அவரைப்பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று  அனைத்துத் தரப்பிலும் இருந்து வருகிறது.

இது குறித்துப் பேசிய, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி  திபேன், ``முகிலன் காணாமல் போன விவகாரத்தில் காவல்துறை  விசாரணையின்றி,  நாங்களே தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் காணாமல் போன அந்த ஒன்றே கால் மணி நேரத்தில் யார் கூட எல்லாம் பேசினார். போன்ற விவரங்களையும் சேகரித்து வருகிறோம். அவர் பேசிய நபர்களையும் நேரடியாக சந்தித்துப்  பேசி வருகிறோம். அதோடு முகிலனுக்கு  இருந்த பிரஷர் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவருக்கு என்ன பிரச்னை வருமோ அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், அவருக்கு எதிரான வாதங்களை யார் யார் எல்லாம் வைக்கிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகிறோம். அதேபோன்று தேர்தல் நேரம் என்பதால் கோபத்தின் வெளிப்பாடாக அவரை அரசியல்வாதிகள் யாரேனும்  கடத்தியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதன் மூலம் எங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும் பிரமாண பத்திரமாக (அபிடவிட்) நாளை மறுநாள் தாக்கல் செய்கிறோம்" என்றார்.


[X] Close

[X] Close