`என் சகோதரிக்கு நடந்ததைப் போல உணர்ந்தேன்!' - பொள்ளாச்சி விவாகரம் குறித்து மாணவர்கள் | I felt like my sister had a sexual incident in Pollachi

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (13/03/2019)

`என் சகோதரிக்கு நடந்ததைப் போல உணர்ந்தேன்!' - பொள்ளாச்சி விவாகரம் குறித்து மாணவர்கள்

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தார்கள். `தூக்கிலிடு, தூக்கிலிடு காம வெறி பிடித்த மிருகங்களைத் தூக்கிலிடு' என்ற கோஷங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பாலியல்

இதுபற்றி கல்லூரி மாணவரும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் உறுப்பினருமான ஜெயக்குமார் கூறுகையில், ``பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடந்த வன்கொடுமை தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் காவல்துறை கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை. விசாரணை தொடங்குவதற்கு முன்பே இச்சம்பவத்தில் அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு இல்லை என்று மாவட்ட எஸ்.பி. கூறுகிறார். எதன் அடிப்படையில் இப்படிச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை. 7 ஆண்டுகளாக இச்சம்பவம் நடப்பதாகச் சொல்லுகிறார்கள். நிச்சயம் காவல்துறைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அதனால் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள்'' என்றார்.

மாணவர் சர்சின்குமார், ``அந்த வீடியோவைப் பார்க்கும்போது கண் கலங்குகிறது. என் சகோதரிக்கு நேர்ந்த துயரத்தை போன்று உணர்ந்தேன். இதில் ஈடுபட்ட காம வெறிபிடித்த நாய்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க விடக் கூடாது. இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். 276 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது குலை நடுங்குகிறது. ஒவ்வொருவரும் நம் வீட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட துயரமாக நினைத்துப் போராட வேண்டும். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவுக்குத் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். இதற்குப் பின்புலமாக இருந்தவர்களைத் தூக்கிலிட வேண்டும்'' என்றார்.


[X] Close

[X] Close