தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடு போன நூல் - ரூ.18 கோடிக்கு விற்பனையா? | thanjavur saraswathi mahal book stolen and sales in 18 crore

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (13/03/2019)

தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடு போன நூல் - ரூ.18 கோடிக்கு விற்பனையா?

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து திருடு போன புதிய ஆகமங்களின் முதலாம் வேதப் புத்தகம் குறித்து ஊழியர்களிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நூல் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சை ஆய்வு

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் உலகப்புகழ் பெற்று விளங்கி வருகிறது. இந்த நூலகத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள இலக்கியங்கள், வரலாறு, கலை, மருத்துவம், நாட்டியம் சார்ந்த 69,000 நூல்கள், 39,000 ஓலைச்சுவடிகள், சோழர்கால கலைநயமிக்க ஓவியங்கள், நாயக்கர்கால சுவடிகள், மராட்டியர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன இவற்றை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறை இந்த நூலகத்தைப் பராமரித்து வருகிறது. 

இங்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் சீகன் பால்கு, தரங்கம்பாடியில் 1810-ம் ஆண்டு, `புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு' எனும் நூலை மூன்று பிரதிகள் மட்டும் அச்சிட்டார். முதல் பிரதி லண்டன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, மூன்றாவது பிரதி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த நூல் கடந்த 2006 அக்டோபர் 8-ம் தேதி காணாமல் போய்விட்டது. அன்றைய தினம் சிறப்பு அனுமதி பெற்று வந்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர், புதிய ஏற்பாடு நூலை கண்ணாடி பேழையிலிருந்து எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். அதன்பின், அந்த நூல் காணாமல் போனது.

சரஸ்வதி மஹால்

அப்போது, நூலக பாதுகாவலர் பெருமாள், நூலகர் சுதர்சன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருடு போன நூலைக் கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள், சரஸ்வதி மஹால் நூலக ஊழியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சார்பாக அரசுக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர் விசாரணை நடத்தி வந்தார். 

தஞ்சை ஆய்வு

இந்த நிலையில், இன்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் சரஸ்வதி மஹாலுக்கு காலை 11 மணி அளவில் வந்தனர். சரஸ்வதி மஹால் விடுமுறை என்ற நிலையிலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருடு போன சமயத்தில் நூலகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த பெருமாளிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அத்துடன் சரஸ்வதி மஹாலில் காணாமல் போன ஒலைச்சுவடி, பழைமையான பொருள்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டன. விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றன. காணாமல் போன நூல் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூலக வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து உறுதியான தகவலும் இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close