பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி! | Law college students road rally

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (13/03/2019)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி!

பொள்ளாச்சி பாலியல் வன்முறையைக் கண்டித்து அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரியில் கையெழுத்து இயக்கம்  நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக பேரணியாக நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கையெழுத்து இயக்கம்

கடந்த சில தினங்களாக பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பரபரப்பை உண்டாக்கியது. அந்த வீடியோக்களில் பேசும் இளம்பெண்களின் அழுகுரலைக் கேட்டு ஒட்டுமொத்த சமூகமும் கூனிக் குறுகி நின்றது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பொள்ளாட்சி சம்பவத்தைக் கண்டித்து பலர் அறிக்கைகளும் கண்டனங்களும் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரத்திலுள்ள சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் ஒழிய வேண்டும் என்றும் அப்படி குற்றங்களை ஏற்படுத்தும் மாணவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு பூண்டி கூட்டுச் சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்று பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர். அவர்கள் ஏந்திச்சென்ற பதாகைகளில் ஆண் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்ற வாசகம் எழுதியிருந்தனர். இதனால் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


[X] Close

[X] Close