இறைச்சிக்காகப் பதுக்கி வைக்கப்பட்ட அரியவகை கடல் ஆமைகள் - தூத்துக்குடியில் பரபரப்பு | 2 sea turtles seized for the sale of meat in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (14/03/2019)

கடைசி தொடர்பு:09:10 (14/03/2019)

இறைச்சிக்காகப் பதுக்கி வைக்கப்பட்ட அரியவகை கடல் ஆமைகள் - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் இறைச்சி விற்பனைக்காக சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரியவகை இரண்டு கடல் ஆமைகள் மற்றும் இறைச்சியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடல் ஆமை

வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட உயிரிக்கோளப்பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில் 17 சதவிகிதம் மன்னார்வளைகுடா பகுதியாக உள்ளது. இதில், பல்வேறு அரிய வகையான  கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல்பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆமைகள், கடற்பசு, கடல்குதிரை, பால்சுறா, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும், வைத்திருக்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி

இருந்தபோதிலும், இந்தத் தடையை மீறி  நோய்களை குணமாக்கும் மருந்துப் பயன்பாடு உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக எனக்கூறி, சட்டவிரோதமாக கடல் உயிரினங்களைப் பிடித்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் பணியிலும் வன உயிரினப் பாதுகாப்புத்துறை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட பலரும் தீவிரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தாலும் கடல் அட்டைக் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த 10 நாள்களில் 1,700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இறைச்சிக்காக வெட்டி விற்க முயன்ற ஆமைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதைத் தொடர்ந்து, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஜீன்குமார், உதவி ஆய்வாளர்கள் பேச்சிமுத்து, ராமகிருஷ்ணன், சிவகுமார் ஆகியோரது தலைமையிலான போலீஸார் பாத்திமாநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாத்திமாநகர் 6 வது தெருவில் உள்ள அங்கன்வாடிக்குப் பின்புறம் உள்ள பழைய மாநகராட்சி கழிவறை கட்டடத்தில் சட்டவிரோதமாக மூன்று கடல் ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றை இறைச்சிக்காக வெட்டி வைக்கப்பட்ட நிலையிலும், மற்ற இரண்டு ஆமைகள் உயிருடனும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கடலில் விடப்படுகிறது

பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆமைகளில் ஒன்று ஆண் ஆமையும், மற்றொன்று பெண் ஆமையும் ஆகும். இதில் ஆண் ஆமை 85 கிலோ எடையுடனும், பெண் ஆமை 65 கிலோ எடையுடனும் இருந்தது. இவை, மிக அரிய வகையான பச்சை ஆமை வகையைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. கடல் ஆமையின் ஓடுகள், இறைச்சிகளையும், உயிருடன் இருந்த 2 ஆமைகளையும்  போலீஸார் மீட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கடல் ஆமைகளை வனத்துறையின் மன்னார் வளைகுடா உயிரினக் காப்பகப் பிரிவில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி - கடல் ஆமைகள்

பின்னர், அந்த ஆமைகளை மீனவர்கள் உதவியுடன்  வனத்துறையினர் பத்திரமாக திரேஸ்புரம் மொட்டைக்கோபுரம்பகுதி கடலில் விட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கடல் ஆமைகளின் ரத்தம், இறைச்சி மூல நோய்க்கு சிறந்த மருந்தாகச் சொல்லப்படுவதால், சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு, வெட்டி இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close