தேனி தொகுதி யாருக்கு?- அ.ம.மு.கவில் நடக்கும் விவாதம் | Debate in ammk to get ticket in theni Lok Sabha constituency

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (14/03/2019)

தேனி தொகுதி யாருக்கு?- அ.ம.மு.கவில் நடக்கும் விவாதம்

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் மனக்கசப்பு நிலவி வந்த வேளையில், சசிகலாவின் உத்தரவின் பெயரில் விவேக்குக்கு சீட் ஒதுக்க தினகரன் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமமுக தினகரன்

சசிகலாவின் தம்பி ஜெயராமனின் மனைவி இளவரசி, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடச் சிறைத்தண்டனை பெற்று சசிகலாவுடன் பரப்பன அஹ்ரகார சிறையில் உள்ளார். இவரது மகன் விவேக் ஜெயராமன் தற்போது ஜெயா டி.வி. நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். அவரை தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வைக்க இளவரசி தரப்பு கடுமையாக முயற்சி செய்து வந்தது. மார்ச் 11-ம் தேதி அசோக் நகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரனும், தேனியில் விவேக் போட்டியிடுவதை சூசகமாகக் கூறினாராம். இந்நிலையில், நேற்று தேனி நாடாளுமன்றத் தொகுதிக்காக விவேக் விருப்பமனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க. மூத்த நிர்வாகிகள், ``இன்றைய சூழலில் தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், தினகரன் இறங்கி வந்துதான் ஆக வேண்டும். சசிகலாவும் சீட் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதால், தேனி தொகுதியை விவேக்குக்கு ஒதுக்க தினகரன் முடிவெடுத்துள்ளார்'' என்றனர். 

இந்நிலையில், விவேக் தரப்பில் பேசியவர்கள், அவர் போட்டியிடுவதை உறுதி செய்ய மறுத்தனர். அ.ம.மு.க.வுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும், தங்கத் தமிழ்ச்செல்வனும் பக்கபலமாக இருப்பதால், தேனியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் நின்றாலும், விவேக் ஜெயராமன் போட்டியிட்டால் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. 


[X] Close

[X] Close