`உச்சபட்ச தண்டனை கொடுக்கணும்'- பொள்ளாச்சி விவகாரத்தில் கொந்தளித்த கல்லூரி மாணவிகள் | Students Protest Against Pollachi sexual assault case

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (14/03/2019)

கடைசி தொடர்பு:15:30 (14/03/2019)

`உச்சபட்ச தண்டனை கொடுக்கணும்'- பொள்ளாச்சி விவகாரத்தில் கொந்தளித்த கல்லூரி மாணவிகள்

``பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நடந்தது நாளை எங்களுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் இதில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இனி இதுபோல் எந்த ஒரு சம்பவமும்  நடைபெறாத அளவிற்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்'' எனத் தஞ்சாவூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

மாணவிகள் போராட்டம்

தஞ்சாவூரில் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை கண்டித்தும் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் தப்பவிடாமல் கைது செய்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கல்லூரி மாணவிகள், அனைத்துக் கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் தனித் தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு காலை 8.30 மணிக்கெல்லாம் கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ``மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இதில் ஈடுபட்டதாகக் கூறி நான்கு பேரை மட்டும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்தத் தண்டனை அவர்களுக்குப் போதாது. மேலும் இதில் ஈடுபட்ட பலர் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க விடப்பட்டுள்ளனர். அவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் குறையும். இன்றைக்கு பொள்ளாச்சி மாணவிகளுக்கு நடந்தது நாளைக்கு எங்களுக்கு நடக்காது என்பதில் என்ன சந்தேகம். உன்னை நம்பிதானே வந்தேன் என அந்த வீடியோவில் வரும் பெண் கெஞ்சுகிறாள். அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஈவு இரக்கமின்றி இந்தச் செயலை தொடர்ந்து செய்கின்றனர். அப்படிபட்ட அரக்கர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டக்கூடாது'' என ஆவேசமாகக் கூறினார்கள்.

வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், இந்தச் சம்பவத்தில் எஸ்.பி பாண்டியராஜன் தொடக்கத்திலிருந்தே சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கு முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கு காரணமான எஸ்.பி.பாண்டியராஜனை உடனே பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

அனைத்துக் கட்சி சார்பில் ரயிலடியில் நடந்த போராட்டம்

அனைத்துக் கட்சி சார்பில் ரயிலடியில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதில் பேசிய அனைத்துக் கட்சி பிரமுகர்களும் இந்தச் சம்பவத்தில் பலர் பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இன்னும் கைது செய்யவில்லை. இந்தச் சம்பவத்திற்கான விசாரணையில் அரசியல் தலையீடுகள் நடந்துள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பெயர் இந்தச் சம்பவத்தில் அழுத்தமாக அடிபடுகிறது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பிருக்கிறதோ அவர்களை எந்தப் பாரபட்சமும் காட்டாமல் கைது செய்து தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்'' எனப் பேசியதோடு தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து கோஷமிட்டனர்.
                               

உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டையில் மாணவிகள் போராட்டம்

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் உடுமலைப்பேட்டைப் பகுதியில் இயங்கி தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சீருடை அணியாத காவலர்கள் மிரட்டி வருவதாகவும், போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close