`மதுரையில் தேர்தல் தேதியை மாத்தலன்னா எங்களின் வாக்கு சதவிகிதம் குறையும்!'- திருநங்கை மனு | Transgenders Opposed Lok sabha Election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:33 (16/03/2019)

`மதுரையில் தேர்தல் தேதியை மாத்தலன்னா எங்களின் வாக்கு சதவிகிதம் குறையும்!'- திருநங்கை மனு

``கூத்தாண்டவர் கோயில் திருவிழா வருவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்'' என மதுரை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்தனர்.

திருநங்கை பாரதி கண்ணம்மா

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழத்தில், ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம், மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், தேதியை மாற்ற வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பார்த்தசாரதி என்பவர் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மனு அளித்து, அதன் விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் ``கூத்தாண்டவர் கோயில் திருநங்கைகள், திருவிழா ஏப்ரல் 15,16,17 அன்றும் தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் சில முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால். தமிழகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்துவரும் திருநங்கைகளும், பொதுமக்களும் உடனடியாகத் திரும்பிச்சென்று சொந்த ஊர்களில் வாக்களிக்க முடியாது. எனவே, தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும்'' என திருநங்கை பாரதிகண்ணம்மா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதி கண்ணம்மா, `மதுரையில் தேர்தல் தேதியை மாற்றவில்லையென்றால், திருநங்கைகளின் வாக்கு சதவிகிதம் குறையும்'' என வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே, தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பார்த்தசாரதி தாக்கல்செய்த மனு, உயர் நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது'' என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.


[X] Close

[X] Close