`எப்படி நேர்காணல் நடத்தினார் விஜயகாந்த்?’ | vijayakanth interact with dmdk cadres for parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:34 (16/03/2019)

`எப்படி நேர்காணல் நடத்தினார் விஜயகாந்த்?’

தே.மு.தி.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார். விஜயகாந்த், முடிந்தளவுக்கு பேசி நிர்வாகிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். 

விஜயகாந்த் நேர்காணல்

 
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் அல்லது கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நேர்காணல் நடத்தினர். இந்த நேர்காணலில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவர் கோயிலுக்குச் சென்றுவிட்டதாகக் கட்சியினர் தெரிவித்தனர். 

விஜயகாந்த் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் முதல் கேள்வியை விஜயகாந்த் கேட்டுள்ளார். அப்போது விஜயகாந்த்தின் சத்தம் பலருக்குக் கேட்கவில்லை. இதனால் சைகை மூலம்தான் அவர் நேர்காணலை நடத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அவரின் நிலையை நிர்வாகிகள் புரிந்துகொண்டனர். இதையடுத்து விஜயகாந்த்தின் அருகிலிருந்த மாநில நிர்வாகிகள்தான் நேர்காணலை நடத்தியுள்ளனர். நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டுள்ளனர். நீண்டஇடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த்தை சந்தித்த நிர்வாகிகள் முகத்தில் அதிக மகிழ்ச்சி. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்த மணியிடம் விஜயகாந்த் நேர்காணல் நடத்தியபோது, `தேர்தலில் போட்டியிட வரவில்லை, உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்' என்று ஆனந்தமணி கூறியுள்ளார்.

விஜயகாந்த்

வட மாவட்டத்திலிருந்து நேர்காணலுக்கு வந்திருந்த ஒரு நிர்வாகியை நீண்ட நேரம் உற்றுபார்த்துள்ளார் விஜயகாந்த். கேப்டன் என்ன கேள்வி கேட்கப்போகிறாரோ என்ற பயத்தில் அவருக்கு கால், கை உதறியுள்ளது. இதனால் நேர்காணல் அறையில் அமைதி நிலவியது. அதன் பிறகு விஜயகாந்த், அவரின் பெயரை குறிப்பிட்டு, `வடமாவட்டத்துக்கு நான் வந்த சமயத்தில் நீங்கள்தானே எனக்கு சாப்பாடு கொண்டு வந்தீர்கள்' என்று கூறியுள்ளார். ஆனால், அவரின் சத்தம் கேட்கவில்லை. அதன் பிறகு சைகை மூலம் கூறியுள்ளார். இதனால் அந்த நிர்வாகி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த்தின் உடல் நலம் தேறிவருகிறது. முன்பைவிட நன்றாக நடக்கிறார். மேலும், கட்சி நிர்வாகிகளை அடையாளம் கண்டு பழைய நினைவுகளை விஜயகாந்த் பகிர்ந்துகொள்கிறார். இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்த், தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். அதற்கான தேர்தல் சுற்றுப்பயண பட்டியல் குறித்த ஆலோசனையில் தே.மு.தி.க-வினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தலையொட்டி பிரேமலதா விஜயகாந்த், தங்களின் குலசாமி கோயிலுக்குச் சென்று வேண்டுதலில் ஈடுபட்டுவருகிறார். தே.மு.தி.க-வின் வேட்பாளர் பட்டியலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து பூஜை செய்த பிறகே வெளியிட தே.மு.தி.க-வினர் திட்டமிட்டுள்ளனர். 
 


[X] Close

[X] Close