மின்கோபுரத் திட்டத்துக்கு எதிராக மீண்டும் சூடுபிடிக்கும் விவசாயிகள் போராட்டம் | Farmers protest at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (14/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (14/03/2019)

மின்கோபுரத் திட்டத்துக்கு எதிராக மீண்டும் சூடுபிடிக்கும் விவசாயிகள் போராட்டம்

விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து, திருப்பூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பாக, விவசாய விளை நிலங்களின் வழியே உயர் மின்அழுத்தக் கோபுரங்கள் அமைக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்ததுடன், திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பின்பற்றப்படுவதைப்போல நிலத்துக்கு அடியிலேயே கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதையும் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

ஆனால், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து மின் கோபுரங்கள் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்திவருகிறது அரசு நிர்வாகம். எனவே, தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசைக் கண்டித்தும், விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமையவிருப்பதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும், கடந்த காலங்களில் காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டமைத்தனர் விவசாயிகள். இந்த நிலையில், சிறு இடைவேளைக்குப் பிறகு, தற்போது மீண்டும் மின்கோபுரத் திட்டத்துக்கு எதிரான தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். இன்று, திருப்பூர் ரயில்நிலையம் அருகே அமைந்துள்ள குமரன் நினைவகம் முன்பு மின்கோபுரத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன், "தேர்தல் முடியும்வரை இந்த மின்கோபுரத் திட்டத்தை செயல்படுத்தாமல், தேர்தலுக்குப்பின் விவசாயிகளை அழைத்துப்பேசி மாற்றுவழியில் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என்று தெரிவித்தனர்.


[X] Close

[X] Close