கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளர் ஆவாரா கௌதமசிகாமணி? - நெருக்கும் அடுத்தடுத்த வழக்குகள் | ponmudi son Gautham Sigamani explained about his pending cases

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:49 (16/03/2019)

கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளர் ஆவாரா கௌதமசிகாமணி? - நெருக்கும் அடுத்தடுத்த வழக்குகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டிவருகிறது தி.மு.க தலைமை. கூட்டணிக் கட்சிகளில் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகின்றன என்பதுகுறித்த ஆலோசனையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அந்தத் தொகுதியில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டுவருகிறது. அதற்கேற்றாற்போல, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் கௌதமசிகாமணி

கௌதமசிகாமணி

வேட்பாளராக இவர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, இவர்மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர்மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதுதான் இந்த விமர்சனத்துக்குக் காரணம். பொன்முடி கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது, வானூர் தாலுகாவில் செம்மண் குவாரி அமைக்க, தன்மகன் பெயருக்கு அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாகவும், அந்தக் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு  மூன்று மடங்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொன்முடியுடன் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் கௌதமசிகாமணி. இதேபோல, 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடியுடன் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிட்டுள்ளார்கள்.

துரைமுருகனுடன் கௌதமசிகாமணி

இப்படி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பதுகுறித்து  சந்தேகம் எழுந்த நிலையில், இதுகுறித்து பொன்முடியின் மகன் கௌதமசிகாமணியிடம் பேசினோம். ``என்மீது சொத்துக்குவிப்பு வழக்கு எதுவும் இல்லை. வானூர் செம்மண் குவாரி வழக்கு ஜெயலலிதா தொடுத்த ஒரு பொய் வழக்கு. ஜெயலலிதா போட்ட எந்த வழக்குமே உண்மையான வழக்கு கிடையாது என்பது அனைவருக்குமே தெரியும். எல்லோர்மீதும் பொய் வழக்கு போட்டுள்ளார். 6 வருடங்களாக வானூர் செம்மண் குவாரி வழக்கு நடந்துவருகிறது. இதுவரை எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இந்த விவகாரத்தைப் பரப்பிவருகிறார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close