"உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு நாளை விசாரணை! திக் திக் அ.ம.மு.க" | two leaves case will come on supreme court tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:49 (16/03/2019)

"உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு நாளை விசாரணை! திக் திக் அ.ம.மு.க"

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாளை விசாரிக்கிறது. 

உச்சநீதிமன்றம்

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க, அம்மா, அ.தி.மு.க, புரட்சித்தலைவி அம்மா என அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்தது. ஏப்ரல் 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரு அணிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியதால், அச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் ஒன்றாக இணைந்தன. இரட்டை இலைக்கு உரிமை கோரி, ஒன்றிணைந்த அணிகள் சார்பிலும், டி.டி.வி.தினகரன் சார்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 

இருதரப்பையும் விசாரித்த தேர்தல் ஆணையம், ஓ.பி.எஸ். -  ஈ.பி.எஸ் அணிக்கே கட்சிப் பெயரையும் சின்னத்தையும் ஒதுக்கி, 2017 நவம்பர் 23-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா, தினகரன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நீடித்த இவ்வழக்கில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை  தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, தற்போது டி.டி.வி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மார்ச் 15-ம் தேதி, அ.ம.மு.க தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் சூழலில், தினகரனின் அரசியல் வாழ்வை நிர்ணயிக்கப்போகும் மிக முக்கியமான இரட்டை இலை சின்னம் வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு நாளை விசாரணைக்குவருகிறது. உச்ச நீதிமன்றம் அளிக்கப்போகும் இத்தீர்ப்பில்தான், அ.ம.மு.க-வுக்கு தனிச்சின்னமும், அ.தி.மு.க-வின் ஒரு அணியாகச் செயல்படுவதும் உறுதிப்படுத்தப்படும். கட்சி தொடங்கப்பட்ட நாள் பரிசாக, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என அ.ம.மு.க-வினர் நம்பிக்கையோடு இருக்கின்றனர். 


[X] Close

[X] Close