12 பறக்கும்படைகள்... 24 மணி நேரம்...3 ஷிஃப்ட்டுகள்... - கரூரில் அதிரடிகாட்டும் தேர்தல் வாகனத் தணிக்கை | Election Officers high Alert in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/03/2019)

கடைசி தொடர்பு:13:50 (16/03/2019)

12 பறக்கும்படைகள்... 24 மணி நேரம்...3 ஷிஃப்ட்டுகள்... - கரூரில் அதிரடிகாட்டும் தேர்தல் வாகனத் தணிக்கை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நடைபெற்றுவந்த வாகனத் தணிக்கையைத்  தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டி.கே.ராஜசேகரனோடு சேர்ந்து ஆய்வுசெய்தார்.

மக்களவை தேர்தல்


மக்களவை பொதுத்தேர்தல் நடைமுறைகள் அமுலில் உள்ளதால், பறக்கும் படையினர் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டுசெல்பவர்கள், அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 12 பறக்கும்படைகள் மற்றும் 12 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனத் தணிக்கையில் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், பறக்கும்படையினர் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில் 3 ஷிஃப்ட்டுகளாக 24 மணிநேரமும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்சியர் ஆய்வு


 இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீனாட்சி (அரவக்குறிச்சி) மல்லிகா (கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். மாயனூர் அருகே உள்ள மணவாசி சுங்கச்சாவடி மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி ஆகிய பகுதிளில், பறக்கும்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்ததைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வுசெய்தனர். அப்போது, வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் ஏதேனும் கொண்டுசெல்லப்படுகிறதா என்பதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
 


[X] Close

[X] Close