`பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை அரசே வெளியிடுவது அநியாயம்!’ - கொந்தளிக்கும் ஸ்டாலின்  | pollachi case ; Stalin slams admk government 

வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (14/03/2019)

கடைசி தொடர்பு:07:57 (15/03/2019)

`பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை அரசே வெளியிடுவது அநியாயம்!’ - கொந்தளிக்கும் ஸ்டாலின் 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால், அந்த அரசாணையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. 

பொள்ளாச்சி அறிக்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவலில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீதும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. 

ஐ.ஜி ஸ்ரீதர் மேற்பார்வையில் எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று தங்களது விசாரணையைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக இன்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பல தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலின்

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில், ``பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் - விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாகப் புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையை அ.தி.மு.க அரசு வெளியிட்டிருக்கிறது.

இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும். குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு’’ எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close