பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - விருதுநகரில் மாதர் சங்கம் போராட்டம்! | women's Association of the virudhunagar conduct a protest against pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:07:51 (15/03/2019)

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - விருதுநகரில் மாதர் சங்கம் போராட்டம்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் விருதுநகரில் போராட்டம் நடத்தினர்.

மாதர் சங்கம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாகப் பதிவு செய்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை காப்பாற்றும் நோக்கிலேயே கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் ஈடுபடுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவிகள் மற்றும் பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தச் சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகரச் செயலர் எஸ்.கோமதி ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்டச் செயலர் தெய்வாணை, மாநில துணைத்தலைவர் எஸ்.லட்சுமி உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பாலியல் சம்பவத்தைக் கண்டித்து பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.


[X] Close

[X] Close