சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது! | 5 years old child was sexually abused inn salem

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:08:09 (15/03/2019)

சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது!

சிறுமி பாலியல்

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் மாவட்டமான சேலத்திலும் 5 வயதுச் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட கெளதமனை ஓமலூர் மகளிர் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பனங்காடு காலனியைச் சேர்ந்தவர்கள் இளையராஜா - கவிதா தம்பதியர். இவர்களுக்கு 13 வயது  செல்வம் என்ற மகனும், 5 வயதில் இனியா என்ற மகளும் இருக்கிறார்கள். (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) இளையராஜாவும், கவிதாவும் கூலித் தொழிலாளிகள். நேற்று முந்தினம் காலை தன் மகளை அருகில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் விட்டு விட்டு இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள்.

வேலை முடித்து மாலை வீட்டிருக்கு வந்தவர்கள், தன் மகள் இனியா அழுது கொண்டிருப்பதை பார்த்து அருகில் போய் விசாரித்தவர்கள், அப்போது குழந்தையின் உடம்பில் காயமும், அவரால் எழுந்து நடக்க முடியாததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு விசாரித்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாசம் மகன் கெளதமன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

உடனே ஓமலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்தார்கள். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிறப்பு உறுப்பில் இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கிறது. அதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லுமாறு கூறினார். அதையடுத்து குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடமும், பனங்காட்டிலும் தீவிர விசாரணையை மேற்கொண்டார்கள். பிறகு மது போதையில் இருந்த கெளதமனை நேற்று மதியம் ஓமலூர் போலீஸார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வரை கைது செய்யப்பட்டதைச் சொல்லாமல் இருந்து வருகிறார்கள். இதுபற்றி ஓமலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் அம்பவல்லி, ''கெளதமனைக் கைது செய்து விசாரித்து வருகிறோம். அவன் குழந்தையை வன்புணர்ச்சி செய்திருக்கிறான். அவன் மீது போக்சோ சட்டம் போட்டிருக்கிறோம்'' என்றார்.


[X] Close

[X] Close