``எனக்கு விடுப்பு தராமல் வதைக்கிறார்!" - அதிகாரிக்கு எதிராக தர்ணா செய்த போக்குவரத்து ஊழியர் | Transport Department employee started dharna protest against officer in karur

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (15/03/2019)

கடைசி தொடர்பு:08:40 (15/03/2019)

``எனக்கு விடுப்பு தராமல் வதைக்கிறார்!" - அதிகாரிக்கு எதிராக தர்ணா செய்த போக்குவரத்து ஊழியர்

கரூர் திருமாநிலையூர் கும்பகோணம் கோட்டம் அரசுப் போக்குவரத்து பணிமனையில், அரசுப் போக்குவரத்து ஓட்டுநர் குப்புச்சாமி என்பவர், உயரதிகாரி தனக்கு விடுப்பு வழங்காததைக் கண்டித்தும், தொடர் மன உளைச்சலை ஏற்படுத்தும் அதிகாரியைக் கண்டித்தும், திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டத்தில் குப்புசாமி

திருப்பூரிலிருந்து கரூர் வழியாகச் செல்லும் அரசு விரைவு போக்குவரத்துத் துறை பேருந்தை திருச்சி வழியாக குப்புசாமி இயக்கி வந்துள்ளார். தொடர்ந்து 2 நாள்களாக விடுமுறை அளிக்காமல், அவருக்குக் கட்டாயமாகப் பணி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இன்று விடுமுறை வழங்கக்கோரிய டிரைவர் குப்புசாமிக்கு போக்குவரத்துப் பணிமனை மேலாளர் சக்திவேல் மீண்டும் பணிக்குச் செல்ல வற்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு தான் ஆளாகியுள்ளதாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர் குப்புச்சாமி, ``தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையில் சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வழங்க வேண்டிய பணி குறிப்புகள் ஒரு நாளுக்கு முன்னதாக வழங்கப்படுகிறது. 

மேலும், பணியின் போது ஓய்வு வழங்காமல் தொடர் பணி வழங்குவதால், மன உளைச்சல் ஏற்படுவது குறித்து புகார் அளித்துள்ளேன். இதனால், கரூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் எனக்கு விடுப்பு வழங்காமல், மீண்டும் பணி செய்ய வற்புறுத்துகிறார். மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஒரே வண்டியில் 10 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை ஓய்வு நேரங்களில் பேருந்தை இயக்க வற்புறுத்துவது கிடையாது. ஆனால், என்னைச் சாதிய நோக்கில் மேலாளர் நடத்துவதோடு, பல்வேறு வகையில் துன்புறுத்தல்களை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். எனக்கு விடுப்பு வழங்குவதோடு, என்னைச் சமூக ரீதியில் இழிவுபடுத்தும் மேலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எனது போராட்டம் தொடரும்" என்றார்!


[X] Close

[X] Close