`கிணற்றைக் காணவில்லை... கண்டுபிடித்துத் தாருங்கள்' - திருப்பூர் காவல் நிலையத்தில் மனு கொடுத்த மக்கள் | People gave complaint to Tirupur police station that one well was missing

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (15/03/2019)

`கிணற்றைக் காணவில்லை... கண்டுபிடித்துத் தாருங்கள்' - திருப்பூர் காவல் நிலையத்தில் மனு கொடுத்த மக்கள்

திருப்பூரில் காணாமல்போன கிணற்றைக் காவல்துறையினர் கண்டுபிடித்துத் தரக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நூதனச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

திருப்பூர் காவல் நிலையம்

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட திருநீலகண்டபுரம் பகுதியில் சுமார் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு கிணற்றில் தண்ணீர் குறைந்துபோன காரணத்தால் அந்தக் கிணற்றை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படியான சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தக் கிணற்றுக்கு அருகே வசிக்கும் ஒரு நபர், அந்தக் கிணற்றை முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடிவிட்டு, அதில் வீடுகட்டும் பணியையும் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனால் அந்த நபரிடம் அப்பகுதி மக்கள் நேரில் சென்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறி அவரது தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த கிணற்றை காவல்துறையினரே கண்டுபிடித்துத் தருமாறு அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள். தீர்வு காண்கிறோம் எனக் கூறியதையடுத்து அவர்கள் கோரிக்கையை மனுவாக அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கிணற்றைக் காணவில்லை என்ற பிரச்னையால் திருப்பூர் வடக்குக் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.


[X] Close

[X] Close