கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா - 5 ஆண்டுகளுக்குப் பின் நாட்டுப்படகில் பக்தர்கள் பயணம் | Pilgrims travel by boat to participate in the Katchatheevu festival

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:09:00 (15/03/2019)

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா - 5 ஆண்டுகளுக்குப் பின் நாட்டுப்படகில் பக்தர்கள் பயணம்

இன்று மாலை நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம்


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இன்னும் பிரச்னைக்கு உரிய தீவாகக் கச்சத்தீவு இருந்து வந்தாலும் அது புனித தீவாகத்தான் இருநாட்டு மக்களிடையே பார்க்கப்படுகின்றது. இதற்கு அங்குள்ள புனித அந்தோணியாரே காரணம். 287ஏக்கர் பகுதியைக் கொண்டுள்ள கச்சத்தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தூரத்திலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து 18 கடல் மைல் தூரத்திலும் உள்ளது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் இருநாடுகளிலிருந்து சுமார் 6,000 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவு செல்லும் பக்தர்கள்

இந்நிலையில் இந்தாண்டு கச்சத்தீவு திருவிழா மார்ச் 15 மற்றும் 16 -ம் தேதிகளில்(இன்று மற்றும் நாளை) நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து 65 விசைப்படகுகளில் 2,204 பக்தர்களும், 15 நாட்டுப்படகுகளில் 246 பக்தர்களும் என மொத்தம் 2,450 பக்தர்கள் செல்லவுள்ளனர். இன்று காலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்குச் செல்லத் தொடங்கினர். இதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பக்தர்கள் செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.
 

இன்று மாலை கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயிலில் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், இரவு பிரார்த்தனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து சனிக்கிழமை காலை தேர்ப்பவனியும், திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மற்றும் பங்குதந்தையர்களும், ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் தமிழகப் பங்குத் தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் பங்கேற்கின்றனர். நாளை காலை திருப்பலி முடிந்த பின் ராமேஸ்வரத்திற்கு இந்திய பக்தர்கள் அனைவரும் திரும்புவர்.

கச்சத்தீவு பயணத்தை ஆய்வு செய்யும் டி.ஐ.ஜி காமினி


 முன்னதாக நேற்று மாலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கச்சத்தீவு பயண ஏற்பாட்டிற்காக 350 போலீஸார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றார்கள். அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது எனவும், பத்திரிகையாளர்கள் இந்திய, இலங்கை அரசின் அனுமதி பெற்றால் மட்டுமே திருவிழாவிற்குச் செல்லமுடியும்'' எனவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை டி.ஐ.ஜி காமினி பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
 
பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுப்படகில் கச்சத்தீவு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீனவர்கள் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் நாட்டுப்படகுகளை அனுமதிக்கக் கோரி வழக்குத் தொடுத்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் 15  நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 


[X] Close

[X] Close