பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டு திருச்சியில் திரண்ட இளைஞர்கள்! - சமாதானம் பேசிய போலீஸ் | Trichy youths Protest against pollachi gang rape issues

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (15/03/2019)

கடைசி தொடர்பு:11:51 (15/03/2019)

பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டு திருச்சியில் திரண்ட இளைஞர்கள்! - சமாதானம் பேசிய போலீஸ்

பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்டு திருச்சி நீதிமன்றம் அருகே நேற்று இரவு இளைஞர்கள் திரண்டதால் விடிய விடிய பரபரப்பு நிலவியது.

திருச்சி இளைஞர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாவதால் கூடுதல் பரபரப்பு நிலவுகிறது. இந்த வழக்கு தமிழக போலீஸார், சி.பி.சிஐ.டி விசாரணை என இறுதியாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீஸார் கைது செய்திருந்தாலும் அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை சட்டத்துக்குப் புறம்பாக வெளியில் கூறிய எஸ்.பி பாண்டியராஜனை சஸ்பெண்ட் செய்ய கோரியும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து நேற்று மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு எஸ்.பி பாண்டியராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலைப் பகுதியில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு நீதி கேட்டு நேற்றிரவு கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் துண்டறிக்கைகள், பேப்பர் சார்ட், ஸ்கெட்ச் பென்சில் ஆகியவற்றுடன் திரண்டு வந்ததுடன் பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்கும் வாசகங்களை உள்ளடக்கிய ஃப்ளெக்ஸ்களை தயாரித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள உய்யங்கொண்டான் வாய்க்காலையொட்டியுள்ள பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள், இதுகுறித்து லோக்கல் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் போராட்டம் நடத்திய இடம் என்பதால் கூடுதல் பரபரப்பானது.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீஸார், அங்கு திரண்டிருந்த மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸார் இளைஞர்களின் போராட்ட உணர்வு நியாயமானது. இதுகுறித்து முறையாக போலீஸாரிடம் அனுமதி வாங்கிப் போராட்டம் நடத்தினால் பிரச்னை இல்லை. தற்போதைய சூழலில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய நேரிடும் என்று கூறியவுடன் அசாதாரண சூழல் நிலவுவதால் கலைந்துசெல்லுமாறு போலீஸார் வலியுறுத்தினர்.

இதனை ஏற்ற மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் அப்பகுதியில் திரண்டு விடுவார்கள் என்பதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் முடியாத சூழலில் போலீஸார் மீண்டும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று ஒரு போராட்டம் நடப்பதைத் தவிர்ப்பதற்காக சாலையோரப் பூங்காவில் அமர்ந்திருந்த அனைவரையும் அங்கிருந்து கிளம்ப வைத்தனர். இப்போதும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதி கேட்டு திருச்சி கல்லூரி மாணவர்கள் இரவில் திரண்டதால் விடிய விடிய திருச்சியில் பரபரப்பு நிலவியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close