8.75 கோடியில் 192 காசோலைகள்...1.20 கோடியில் கடனுறுதிப் பத்திரங்கள்... சோதனையில் அதிர்ந்த போலீஸ் | Election Flying Squad Confiscated Amount at trichy

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:12:00 (15/03/2019)

8.75 கோடியில் 192 காசோலைகள்...1.20 கோடியில் கடனுறுதிப் பத்திரங்கள்... சோதனையில் அதிர்ந்த போலீஸ்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்வதை தடுக்க, ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் பறக்கும்படை

குறிப்பாகத் திருச்சி மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் ஒருவரும், சிறப்பு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள், வீடியோ கிராபர் எனத் தேர்தல் பறக்கும் படையில் இடம்பெற்றுள்ளனர். சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் நகர எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் இந்தப் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபடுவதுடன், வாகன சோதனையும் நடத்தி வருகிறார்கள். பணம் கொடுப்பது தொடர்பாகவும், பணம், பொருள் வழங்குவது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம், அச்சுறுத்தல் தொடர்பாகவும் புகார் வரப்பெற்றால் உடனடியாக இந்தப் பறக்கும் படை குழு சம்பவ இடத்திற்குச் சென்று தேர்தல் விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

சோதனையில் சிக்கிய காசோலைகள்

திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தற்காலிகமாக வாகன பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு வாகனங்களைப் பரிசோதனை செய்வார்கள். இதில் ரூபாய் 50,000 வரையில் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ரூபாய் 50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் முறையான ஆவணம் காண்பிக்க வேண்டும். முறையான ஆவணம் காண்பிக்கவில்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். ரூ.10,000 மதிப்புக்கு மேற்பட்ட பொருள்களை எடுத்துச்செல்லும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக வாகன பரிசோதனை நிலையான கண்காணிப்புக்குழு மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.

தனி தாசில்தார் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை

இந்நிலையில் திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 8 கோடி மதிப்பிலான காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பராய்த்துறை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மெயின்ரோட்டில் உள்ள சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் அந்த வழியே வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் மணி பேச்சிமுத்து என்கிற மூன்று பேர் இருந்தார்கள். அவர்களிடம் 8.75 கோடி மதிப்புள்ள 192 காசோலைகளும் ரூ.1,20,00,000 மதிப்புள்ள கடனுறுதிப் பத்திரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்தக் காசோலைகள் மற்றும் கடன் உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றை எதற்காக காரில் வந்த கும்பல் எடுத்துச் செல்கிறார் என்பது குறித்து முறையாகத் தெரிவிக்கவில்லை. மேலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் காரில் இருந்த 192 காசோலைகள் மற்றும் இரண்டு கடன் உறுதிப் பத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை எடுத்து ஸ்ரீரங்கம் தரித்தார் கனக மாணிக்கத்திடம் ஒப்படைத்தனர்.

தனி தாசில்தார் சுமதி தலைமையில் சோதனை

இதேபோல் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை சிப்காட் தனி வட்டாட்சியர் வசந்தா தலைமையில், வாகனத்தணிக்கையில் ஈடுபட்ட போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை கருணாகரன் என்பவரிடமிருந்து கைப்பற்றிய பறக்கும்படை அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம், திருச்சி சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து தேர்தல் பறக்கும்படையால் பணம் கைப்பற்றப்படுவது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close