9 தமிழகக் கட்சிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம்! - அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம் | nine political parties charged with one lakh for no appearance on court

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:14:00 (15/03/2019)

9 தமிழகக் கட்சிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம்! - அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய பெஞ்ச், சம்மன் அனுப்பியும்  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ஒன்பது கட்சிகளுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் 

வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட  பிரச்னைகளுக்கான தீர்வுகள்குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அனைத்து வேட்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்குகுறித்து கருத்து கேட்பதற்காக, 14 கட்சிகளுக்கு சம்மன் அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம். 

இவ்வழக்கில், பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். ஆனால், பிற கட்சிகளின் சார்பாக யாரும் ஆஜராகவில்லை.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், " நம் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும், ஆள விரும்பும், நாடாளுமன்றத்தில்கூட தங்கள் பிரதிநிதிகளைக்கொண்ட இந்தக் கட்சிகள், நீதிமன்றத்தின் நேரடி உத்தரவைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. நாட்டை ஆள விரும்பும் கட்சிகளே நீதிமன்றத்தை அவமதித்தால்,  சாதாரண பொதுமக்கள் நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமின்றி, இந்த கட்சிகள் தம்முடைய தொண்டர்களுக்கு முன்மாதிரிகளாக, சட்டத்திற்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில்கொண்டு, இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தனர். 

காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, வி.சி.க, ச.ம.க, முஸ்லிம் லீக், ஃபார்வர்ட் பிளாக், சி.பி.ஐ , சி.பி.ஐ (எம்) ஆகிய ஒன்பது கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.   இந்த ஒரு லட்ச ரூபாயை, போர் விதவைகள் சங்கத்திற்கு ( widows war association)  இரண்டு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட  வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த கட்சியின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏலத்தில் விட்டு, இந்த அபராதத் தொகையை மீட்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


[X] Close

[X] Close