பத்தனம்திட்டா தொகுதிக்கு போட்டிபோடும் பா.ஜ.க தலைவர்கள்! - என்ன காரணம்? | High competition for paththanamthitta constituency in Kerala bjp

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (15/03/2019)

கடைசி தொடர்பு:13:52 (16/03/2019)

பத்தனம்திட்டா தொகுதிக்கு போட்டிபோடும் பா.ஜ.க தலைவர்கள்! - என்ன காரணம்?

நாடாளுமன்றத் தேர்தலில் சபரிமலை விவகாரம் எதிரொலிக்கும் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதிக்காக கேரள பா.ஜ.க. தகைவர்கள் முட்டிக்கொள்ளும் காட்சி அரங்கேறி வருகிறது.

ஸ்ரீதரன்பிள்ளை


கேரள மாநில அரசியலில் சபரிமலை விவகாரம் இந்தமுறை கைகொடுக்கும் என பா.ஜ.க. கணக்குப்போட்டுள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் சபரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பா.ஜ.க. குறிப்பிட்ட அளவு ஓட்டு வாங்கியிருந்தது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பா.ஜ.க. தலைவர்கள் கடும் முயற்சியில் உள்ளனர்.

கே.சுரேந்திரன்


கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் தொகுதியை மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை குறிவைத்திருந்தார். ஆனால் மிசோரம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த கேரள பா.ஜ.க. முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் ஸ்ரீதரன் பிள்ளை பத்தனம்திட்டா தொகுதியை குறிவைத்து காய் நகர்த்துகிறாராம். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் செல்ல எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் அதிக நாள்கள் சிறையில் இருந்தவர் கேரள பா.ஜ.க. பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.சுரேந்திரன். இவர், பத்தனம்திட்டா தொகுதி தனக்கே வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்து வருகிறாராம். 

எம்.டி.ரமேஷ்​​​​​​


பத்தனம்திட்டா தொகுதியை தராமல் இருந்தால் திருச்சூர் தொகுதி வேண்டும், இந்த இரண்டு தொகுதியில் ஒன்றைத் தராமல் இருந்தால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கே.சுரேந்திரன் கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்தனம்திட்டா தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு 1,38,954 ஓட்டுகள் பெற்றார் பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான எம்.டி.ரமேஷ். எனவே, மீண்டும் அதே பத்தனம்திட்டா தொகுதி வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கிறாராம் எம்.டி.ரமேஷ். கேரள பா.ஜ.க.வின் மூன்று முக்கிய தலைவர்கள் பத்தனம்திட்டா நாடாளுமன்றத் தொகுதிக்காக முட்டிக்கொள்வது தேசிய தலைமைக்குத் தலைவலியாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


[X] Close

[X] Close