``புகார் அளித்தவர்களின் பெயர்கள் வெளியே வருவது சந்தேகமளிக்கிறது!" - 'மனிதி’ செல்வி | Manithi selvi talks about today's human chain protest in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (15/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (15/03/2019)

``புகார் அளித்தவர்களின் பெயர்கள் வெளியே வருவது சந்தேகமளிக்கிறது!" - 'மனிதி’ செல்வி

போராட்டம்

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் செய்திகள் தினந்தோறும் நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அளிக்கிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் கைது செய்யக் கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில போராட்டங்களுக்குக் காவல் துறை அனுமதியளிக்கிறது, சில போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. பொள்ளாச்சியில் கனிமொழி எம்.பி, தடையை மீறி போராட்டம் நடத்தி கைதானார். இன்று (மார்ச் 15) சென்னையில், அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு, பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு எதிராக, மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தவிருக்கிறது. இதற்கு முதலில் திட்டமிட்ட இடம் மெரினா. ஆனால், நடக்கவிருக்கிறதோ சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை. ஏனிந்த மாற்றம் என்பதைக்  கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருக்கும் 'மனிதி' யைச் சேர்ந்த செல்வியிடம் கேட்டேன். 

மனிதி செல்வி

``பொள்ளாச்சியில் நடந்த குற்றச் செயல்கள் கொடூரமானதாக இருக்கிறது. அதற்குக்  கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கின்றன. நாங்கள் இந்தப் போராட்டத்தின் வழியே முன்வைப்பவை என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் புகார் அளித்த பெண்களின் பெயர்கள் மிக எளிதாக வெளியே வந்துவிடுகிறது. பல வழக்குகளில் உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியே பகிரக்கூடாது என்று வலியுறுத்தியும், அரசு ஆணையிலேயே இது அப்பட்டமாகக் குறிப்பிடப்படுகிறது என்றால், இது மிகவும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதே உண்மை. புகார் அளிப்பவர்களின் பெயர்களை எல்லோருக்கும் தெரிய வைப்பதன் மூலம், புகார் அளிக்கத் துணியும் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்க வேண்டியது. இந்த விஷயத்தை அலட்சியமாகக் கையாண்ட பாண்டியராஜன் எஸ். பி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுப்பப்படும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும். இந்த வழக்கு நீதிமன்றக் கண்காணிப்பில் நடக்கும்பட்சத்தில்தான் சரியான நீதி கிடைக்கும். அதற்கான உத்தரவும் இடப்பட வேண்டும்." என்றவரிடம் போராட்டம் இடம் மாற்றப்பட்டது பற்றி கேட்டோம். 

``இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அதனால், எல்லோருக்கும் பொதுவான மெரினாவில் காந்தி சிலை அருகில் என முடிவெடுத்திருந்தோம். அதற்கான அனுமதி கேட்டு, காவல் துறையை அணுகினோம். அவர்கள் இது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையத்திடம் செல்லச் சொன்னார்கள். அங்குச்  சென்றால், `நாங்க அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைத்தான் கண்காணிப்போம் இது எங்கள் வரம்பில் வராதே' என்றனர். மீண்டும் காவல் துறை, தேர்தல் ஆணையம் என மாறி, மாறி அலைந்து ஒரு வழியாக, தேர்தல் ஆணையத்தில் மெரினாவில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டோம். அதனால்தான், எங்களின் விளம்பரங்களில் மெரினா என்றே போட்டிருந்தோம். ஆனால், திடீரென்று காவல் துறை எங்களிடம், `மெரினா போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்ட இடம். அதனால், அங்கு அனுமதிக்க முடியாது. மீறினால் கைது செய்வோம்' என்றனர். பொதுமக்களும் கலந்துகொள்ளும் சூழலும் இருப்பதால், மாற்று இடம் கேட்டோம். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் என்று முடிவானது. அதன்படி, இன்று மாலை, அனைத்துப் பெண்களின் கூட்டமைப்பு சார்பாக, மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும். இதில் கல்வியாளர் வசந்தி தேவி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

பொள்ளாச்சியின் கொடூரத்திற்கு அனைத்துத் தரப்பிலிருந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி, உரிய நேரத்தில் கிடைக்கும்" என்கிறார் மனிதி செல்வி.  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close