இப்படிச் செய்தால் புகார் கொடுக்க எந்தப் பெண் முன்வருவாங்க? - தமிழக அரசை சாடிய நீதிமன்றம் | High court slams tamilnadu government in pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (15/03/2019)

கடைசி தொடர்பு:15:23 (15/03/2019)

இப்படிச் செய்தால் புகார் கொடுக்க எந்தப் பெண் முன்வருவாங்க? - தமிழக அரசை சாடிய நீதிமன்றம்

 

 

பொள்ளாச்சி தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசு ஆணையைத் திரும்பப்பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  இளமுகில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``பொள்ளாச்சி பாலியல் தொடர்பான பிரச்னையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை கோவை எஸ்.பி வெளியிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் பாதிக்கப்பட்டவர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதர்கள் தாக்கப்பட்டனர். இவ்வாறு பல்வேறு பிரச்னைகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, விரைவாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களுக்கு தடை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் எஸ்.எஸ் சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ``இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார் .

இதையடுத்து நீதிபதிகள், ``விவகாரத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த அந்தப் பெண்ணின் அடையாளத்தை விதிகளும் உத்தரவுகளும் இருந்தும் வெளியிட்டது ஏன்? இவ்வாறு செய்தால் இது தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவார்? என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விஷயத்தில் பல பிரச்னைகள் உள்ளது. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.


[X] Close

[X] Close