``நம் வாக்கு, நம் உரிமை” - தூத்துக்குடியில் கலெக்டர், எஸ்.பி நடத்திய விழிப்புணர்வு பைக் பேரணி! | police conduct a awareness bike rally in tuticorin for Our vote is our right

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:13:53 (16/03/2019)

``நம் வாக்கு, நம் உரிமை” - தூத்துக்குடியில் கலெக்டர், எஸ்.பி நடத்திய விழிப்புணர்வு பைக் பேரணி!

``நம் வாக்கு, நம் உரிமை” என்பதை வலியுறுத்தி  தூத்துக்குடியில் காவலர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு இருசக்கரவாகனப் பேரணி நடைபெற்றது.

கலெக்டர், எஸ்பி நடத்திய பேரணி

தூத்துக்குடியில், 100 சதவிகிதம் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் காவலர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில், ``மை வோட்” என்ற வாசகம் பொறித்த, வெள்ளை நிற டீ-சர்ட் அணிந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி.முரளி ரம்பா உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு பேரணியில் கலந்துகொண்டனர்.  

விழிப்புணர்வு பேரணி

கடற்கரைச் சாலையிலிருந்து தொடங்கிய பைக் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதற்கிடையில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. அங்கு கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கைகளில் மேளதாளம் முழங்க தேசியக் கொடி ஏந்தி சிலம்பாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். அதன் முடிவில், அவ்வழியே சென்ற இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகளின் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஒட்டினர். அத்துடன், வாகன ஓட்டிகளிடம் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.  

தேசியக் கொடி ஏந்தி சிலம்பாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

அரசு பேருந்தில் விழிப்புணர்வு பேரணி

இதை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கல்லூரிகளில் பயின்று வரும் முதல் முறை வாக்காளர்கள், அதிக ஓட்டுப்பதிவு இல்லாத பகுதியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குக்காக பணம்,பரிசுப் பொருள்கள் எதுவும் பெறக்கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை ரூ.7 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close