`கண்ணாடியில் எழுதப்பட்ட வரிகள்!’ - தாயுடன் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் | lady engineer attempts suicide with her mother in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (15/03/2019)

கடைசி தொடர்பு:15:41 (15/03/2019)

`கண்ணாடியில் எழுதப்பட்ட வரிகள்!’ - தாயுடன் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர்

பெண் இன்ஜினீயர் தங்கியிருந்த வீடு

சென்னை கொளத்தூரில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், கண்ணாடியில் மரணம் தொடர்பாகச் சில வரிகளை எழுதியுள்ளார் பெண் இன்ஜினீயர். ஆனால், இவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். 
 
சென்னை கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகர் மூன்றாவது தெருவில் குடியிருந்தவர் மாலதி (45). இவரின் மகள் ஷர்மிளா (25). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாகக் குடியிருந்தனர். இந்தநிலையில் மாலதியின் வீட்டின் கதவு சில நாள்களாகத் திறக்கப்படவில்லை. இதனால் வெளியூர் சென்றிருக்கலாம் என்று அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் கருதினர். வீட்டிலிருந்து நேற்று தூர்நாற்றம் வீசியது. இதனால் கொளத்தூர் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீஸார் வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தூக்கில் அழுகிய நிலையில் மாலதியும் ஷர்மிளாவும் தொங்கிக்கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது வீட்டிலிருந்த கண்ணாடியில் தங்களின் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் வாடகை வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகையை உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. 

பெண் இன்ஜினீயர் தங்கியிருந்த வீடு  

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாலதியின் தம்பி அசோக்குமார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர், பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றினார். மாலதியின் மகள் ஷர்மிளாவும் பி.இ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்துள்ளார். அசோக்குமாருக்கு ஷர்மிளாவை திருமணம் செய்து வைக்கலாம் என உறவினர்கள் கருதியுள்ளனர். இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி அசோக்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அசோக்குமாரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மாலதியும் ஷர்மிளாவும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளனர். அதன் பிறகு இருவரும் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். யாரிடமும் பேசாமல் இருந்த அவர்கள் மூன்று நாள்களுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அவர்களின் தற்கொலை சம்பவம் குறித்து மாலதியின் சகோதரர் ஒருவரிடம் விசாரித்தபோது குடும்பத்தில் அசோக்குமார், மாலதி, ஷர்மிளா என மூன்று பேரை அடுத்தடுத்து பறிக்கொடுத்துவிட்டேன். மாலதியும் ஷர்மிளாவும் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். இதனால், மாலதி, ஷர்மிளா தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறோம். மாலதி, ஷர்மிளா ஆகியோரின் செல்போன்கள் லாக் செய்யப்பட்டுள்ளது. அதை ஓப்பன் செய்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் மாலதி, ஷர்மிளா தொடர்பாக விசாரித்தபோது ஒரு முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதுதான் அவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்’’ என்றனர். 

பெண் இன்ஜினீயர் தங்கியிருந்த  பகுதி    

இதுகுறித்து பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``மாலதி, அருகில் உள்ள மாவுக்கடையில் வேலைபார்த்துவந்துள்ளார். ஷர்மிளா, ஐ.டி. நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு 2 மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் வேலையை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம். அசோக்குமாரின் மரணத்தால் மனஅழுத்தத்தில் மாலதியும் ஷர்மிளாவும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார். 

தாயுடன் பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.  


[X] Close

[X] Close