ஓய்வு பெறும் வயதுள்ள ஆசிரியர்களைக் குறி வைக்கும் பெண் ஆசிரியை! - 56 வயது ஆசிரியர் புகார் | School teacher Complaint Against his collegue

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (15/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (16/03/2019)

ஓய்வு பெறும் வயதுள்ள ஆசிரியர்களைக் குறி வைக்கும் பெண் ஆசிரியை! - 56 வயது ஆசிரியர் புகார்

ஓய்வுபெறும் வயதுள்ள ஆசிரியர்களிடம் அன்பாகப் பேசி அவர்களிடமிருந்து நகை, பணத்தைப் பறிக்கும் 36 வயதுள்ள ஆசிரியை மீது 56 வயது ஆசிரியர் புகார் கொடுத்துள்ளார். 

கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுத்த ஆசிரியர்

சென்னையைச் சேர்ந்தவர் ரத்னம். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் 30 ஆண்டுகளாகக் குடியிருந்துவருகிறேன். எனக்கு வயது 56. நான், வடசென்னையில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நான் ஓய்வு பெற உள்ளேன். இந்தநிலையில் 2013-14-ம் கல்வி ஆண்டில் எங்கள் பள்ளிக்குச் சமூக அறிவியல் பாட ஆசிரியையாக ஒருவர் வந்தார். அவர், தன்னுடைய குழந்தைகளின் கல்விச் செலவுக்காக என்னிடம் பணம் கேட்டார். நானும் பணம் கொடுத்தேன். அதன்பிறகு என்னிடம் பல தடவை அவர் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை அவர் திரும்பக் கொடுக்கவில்லை. நான் பணத்தைக் கேட்கும்போது விரைவில் கொடுத்துவிடுவதாகக் கூறினார். 

இந்தநிலையில் 2017-ல் புதிதாக திருமணமான என்னுடைய மருமகளுக்கு கிஃப்ட் கொடுக்க நகை வாங்க சென்னையில் உள்ள பிரபலமான ஜூவல்லரிக்குச் சென்றேன். அப்போது, ஆசிரியையும் என்னுடன் வந்தார். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை வாங்கினேன். வீட்டுக்கு வந்த பிறகு என்னைச் சந்தித்த ஆசிரியை, திருமண நிகழ்ச்சிக்குச் செல்ல வைர நகைகளை என்னிடம் கேட்டார். நானும் அவரை நம்பிக் கொடுத்தேன். ஆனால், அதன்பிறகு அந்த நகைகளை அவர் திரும்பத் தரவில்லை. என்னை நம்ப வைத்து அவர் ஏமாற்றிவிட்டார். பணத்தையும் நகைகளையும் திரும்பக் கேட்டால் என்னை மிரட்டுகிறார். தற்போது அந்த ஆசிரியை வேறுபள்ளிக்குச் சென்றுவிட்டார். எனவே, நகைகளையும் பணத்தையும் மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 ஆசிரியர் தரப்பு வழக்கறிஞர் அபிமன்யூரத்னத்தின் வழக்கறிஞர் அபிமன்யு கூறுகையில், ``ஆசிரியர் ரத்னத்தின் மனைவியும் அரசு ஊழியர். இவர்கள் இருவரும் மாதம் தலா லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் சம்பளம் பெறுகின்றனர். இந்தநிலையில் ரத்னத்தின் மனைவி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர். இந்தச் சமயத்தில்தான் ரத்னத்தின் மீது அன்பாக இருப்பதுபோல நடித்து ஆசிரியை அவரை ஏமாற்றியுள்ளார். ஆசிரியர் ரத்னத்தை ஏமாற்றிய ஆசிரியைக்கு வயது 36. அவர், கடந்த சில ஆண்டுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். ரத்னத்தை மட்டுமல்ல, அவர் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களைக் குறி வைத்து ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரித்தால் அவரால் ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியல் வெளியில்வரும்’’ என்றார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் பேசினோம். "என் மீது வெங்கடரத்னம் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய். செம்பியம் காவல் நிலையத்தில் என் தரப்பு விளக்கத்தை கூறியிருக்கிறேன். என்னை அசிங்கப்படுத்ததான் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். மேலும் அவரிடமிருந்து இருந்து பணமோ நகையோ நான் வாங்கவில்லை. என் வீட்டுக்கே வந்து அவர் மிரட்டியிருக்கிறார். அதை ரத்னத்தின் மனைவியிடமும் நான் புகார் கூறியுள்ளேன்" என்றார்.


[X] Close

[X] Close