விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்கு யாருக்கு? | cracker labours vote in virudhunagar constituency

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (18/03/2019)

கடைசி தொடர்பு:11:33 (18/03/2019)

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்கு யாருக்கு?

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்கு யாருக்கு?

மிழக சட்டமன்றத்தில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றாத அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாநில அரசுக்கோ, ஆரம்பத்தில் இருந்தே பட்டாசுத் தொழிலுக்கு எதிரான மனநிலையில் இருந்துவரும் மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பி.ஜே.பி.-க்கோ, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர்கள் உறுதிபூண்டுள்ளனர். அத்தகைய மனநிலையிலேயே விருதுநகர் தொகுதியில் அடங்கிய பட்டாசுத் தொழிலாளர்கள் உள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றது. அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பி.ஜே.பி, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.  அதேபோல தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து போட்டியிடுகின்றன. விருதுநகர் தொகுதியில் தி.மு.க. போட்டியிடாமல் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கியுள்ளது. 

பட்டாசு

கடந்த தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யான ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டுக்காகச் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் செய்யவில்லை. பொதுமக்கள் அவரைச் சந்திப்பதுகூட மிகவும் கடினம். இதனால் அ.தி.மு.க. மீது இந்தத் தொகுதி மக்கள் ஆரம்பம் முதலே கடும் அதிருப்தியில் இருந்தனர். விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதி மக்கள் பட்டாசுத் தொழிலையே பிரதானமாக நம்பி உள்ளனர். சிவகாசி மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் எட்டு லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நான்கு மாதங்களாக பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் அந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், நான்கு மாதங்களாக வேலையின்றி அன்றாட வாழ்க்கையையே நடத்தமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பட்டாசு

ஆலைகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது. ஆனால், தமிழக அரசோ, மத்திய அரசோ அந்தப் போராட்டங்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான மனநிலையை பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. எனவே, விருதுநகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எப்படி இருந்தாலும் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்குகள் பி.ஜே.பி - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவே விழும் வாய்ப்புகள் உள்ளதாக இப்போதே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தொழிலாளர்

விருதுநகர் தொகுதியில் வாக்காளர்களின் மனநிலை பற்றி பட்டாசுத் தொழிலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ``பசுமைப் பட்டாசு என்று தெரிவித்து, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பால் பட்டாசு ஆலைகள் முழுமையாக மூடப்பட்டு 100 நாள்களுக்கும் மேலாகி விட்டது. தொழிலாளர்கள் எல்லோரும் வேலையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞரை நியமித்தார்கள். ஆனால், சட்டமன்றத்தில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம்கூட நிறைவேற்றவில்லை. மத்திய அரசோ ஆரம்பத்திலிருந்து பட்டாசுத் தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பட்டாசு தொழிலாளர்கள் மட்டுமின்றி, உற்பத்தியாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் இந்தத் தேர்தலில் பட்டாசுத் தொழிலாளர் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாக்குகள் அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணிக்குக் கிடைக்காது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்