``தடைகளை உரமாகக் கொண்டு வளர்ந்துள்ளோம்! - அ.ம.மு.க விழாவில் அதிரடித்த டி.டி.வி.தினகரன் | ttv dinakaran celebrates ammk first year anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (15/03/2019)

கடைசி தொடர்பு:20:35 (15/03/2019)

``தடைகளை உரமாகக் கொண்டு வளர்ந்துள்ளோம்! - அ.ம.மு.க விழாவில் அதிரடித்த டி.டி.வி.தினகரன்

கடந்த ஓராண்டில் ஆளுங்கட்சியினர் கொடுத்த பல தொல்லைகளை தாண்டி, மக்கள் ஆதரவோடு அ.ம.மு.க. வளர்ந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, இன்று மாலை சென்னை அசோக்நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மேலூரில் கடந்தாண்டு மார்ச் 15-ம் தேதி தொடங்கப்பட்ட அ.ம.மு.க., கடந்த ஓராண்டில் பல சவால்களைக் கடந்துள்ளது. இரண்டாம் ஆண்டு துவக்க விழாவுக்காகத் தமிழகமெங்கும் இருந்து, ஏராளமான தொண்டர்கள் தலைமைக் கழகம் வந்திருந்தனர். 

சரியாக மாலை 5:30 மணிக்கு அசோக்நகர் அலுவலகம் வந்த அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கியவர், தன் கட்சியின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் வரும் மார்ச் 26-ம் தேதி மனுத்தாக்கல் செய்வார்கள் என்று அறிவித்துள்ளார்.

கட்சிக் கொடி ஏற்றத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``அம்மாவின் தொண்டர்கள் 95 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அந்தப் பலம் அவர்களிடம் இல்லாததால்தான், அதிகார, ஆட்சி பலத்தை வைத்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். இந்தத் தடைக்கற்கள்தான் எங்கள் வளர்ச்சிக்கு உரம் போட்டது போல ஆகிவிட்டது. மக்கள் ஆதரவோடு அந்த தொல்லைகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெறுவோம். இரட்டை இலை வழக்கை மார்ச் 25-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்கள். நீதிமன்றம் மூலமாக நிச்சயம் எங்களுக்குத் குக்கர் சின்னம் கிடைக்கும்.

மக்களும் தொண்டர்களும் அவர்கள் பக்கம் இல்லாததால்தான், அம்மாவை இழித்துப் பேசியவர்களுடன் வீடு தேடிப் போய் கூட்டணி வைத்துள்ளார்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். தொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டும். விரலுக்கு ஏற்ற வீக்கமாய் சின்னக் கட்சியோடு பேசிக் கொண்டிருந்தோம். எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு மட்டும்தான் கூட்டணி அமைத்துள்ளோம், மீதமிருக்கும் 39 தொகுதிகளிலும், பாண்டிச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி உட்பட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.ம.மு.க.வே போட்டியிடும். வரும் மார்ச் 26-ம் தேதி அ.ம.மு.க. வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வார்கள். 

பொள்ளாச்சி விவகாரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. அந்தக் கொடூரமான சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நான் முன்பே கூறியதுபோல், பொள்ளாச்சி விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு அ.ம.மு.க துணை நிற்கும்." என்றார். 


[X] Close

[X] Close