பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து வழக்கு - ஏப்ரல் மாதத்துக்கு விசாரணை ஒத்திவைப்பு | Pollachi jeyaraman's son accident case adjourned to april

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (15/03/2019)

கடைசி தொடர்பு:21:30 (15/03/2019)

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து வழக்கு - ஏப்ரல் மாதத்துக்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் ஓட்டிச்சென்ற கார் திருப்பூர் அருகே விபத்துக்குள்ளாகி மாணவி ஒருவர் உயிரிழந்த வழக்கில் பிரவீன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன்

தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவராகவும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகிப்பவர் வி.ஜெயராமன். இவரின் மகன் பிரவீன் கடந்த 2016-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, தன்னுடைய நண்பர்களான திலக், வீர சுரேகா, பெரியநாயகி, மந்த்ரா, சுவாதி உள்ளிட்ட 6 பேருடன் காரில் ஈரோடு நோக்கி சென்றுவிட்டு, மீண்டும் கோவை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள ஆதியூர் பிரிவு என்ற பகுதி வழியாகக் கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பின்மீது பட்டு, எதிர்திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீனுடன் காரில் பயணித்த வீர சுரேகா என்ற மாணவி மட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துபோனார். இந்த விபத்து தொடர்பாக அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல் (இந்திய தண்டனை சட்டம் 304(A) -
பிரிவின் கீழ் பிரவீன்மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய விசாரணையின்போது பிரவீன் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


[X] Close

[X] Close