வாகனம் பிரேக்டவுன் ஆனால்..? – ஆட்சியரின் கேள்வியும், குழம்பிய அதிகாரிகளும்! | Theni Election Flying squad

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/03/2019)

கடைசி தொடர்பு:21:40 (15/03/2019)

வாகனம் பிரேக்டவுன் ஆனால்..? – ஆட்சியரின் கேள்வியும், குழம்பிய அதிகாரிகளும்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளில் தேனி மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரோந்துப்பணிக்கான வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர்

 

தேனி மாவட்டத்தில் விரைவு சிறப்புக் குழுவினர் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் என இரண்டு குழுவினருக்கு என மொத்தம் 32 அரசு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மாவட்டம் முழுவதிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில், ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி தங்களது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வர். இதன் மூலம், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை எளிதில் கண்டறியலாம்.

தேர்தல் பணிக்ள்

அந்த வகையில், தேர்தல் பணிக்கான அரசு வாகனங்களில், இன்று காலை ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. அதைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், ``தேர்தல் பணியின்போது வாகனம் பிரேக்டவுன் ஆனால் என்ன செய்வது, ஜி.பி.எஸ் கருவியை எடுத்து வேறு வாகனத்தில் பொருத்திக்கொள்ள முடியுமா” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த ஜி.பி.எஸ் பொருத்தும் தனியார் நிறுவனக் குழுவினர், ``அப்படிச் செய்ய முடியாது. வாகன எண்ணும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ் கருவியும் இணைத்துதான் கம்யூட்டரில் அப்லோடு செய்யப்பட்டிருக்கும். வாகனம் பழுதானால், வாகனத்தைச் சரி செய்ய வேண்டுமே தவிர, ஜி.பி.எஸ் கருவியை எடுத்து வேறு வாகனத்தில் பொருத்திச் செல்ல முடியாது” என்று பதில் கொடுத்தனர்.

தமிழக அரசு

ஆட்சியரின் இந்தக் கேள்வி, அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் சிறிது நேரம் யோசிக்க வைத்தது மட்டுமல்லாது குழப்பத்திலும் ஆழ்த்தியது. தேர்தல் அவசரக் காலத்தில் வேகமாகச் செல்ல வேண்டிய சூழலில், அதற்கு ஏற்றார்போல வாகனங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம். அதை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம், தேர்தல் விதிமீறல்களை விரைவாகச் சென்று சரி செய்ய முடியும் என்பதும் அனைவரது எண்ணமாக உள்ளது.


[X] Close

[X] Close