உரிய நடவடிக்கை வேண்டும் - பொள்ளாச்சி விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை! | pollachi sex scandal case to be handled properly, says human rights judge

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (16/03/2019)

கடைசி தொடர்பு:21:18 (17/03/2019)

உரிய நடவடிக்கை வேண்டும் - பொள்ளாச்சி விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை!

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை என்றால் மனித உரிமை ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன்

நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார். சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துக்குச் செல்லும் வழியில் இருந்த மரப்பாலம் பழுதடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைக்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதுதொடர்பாக இந்த ஆணையத்தில் புகார் செய்யப்பட்டதால் அது குறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பினோம். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சார்பாக பிப்ரவரி 25-ம் தேதி அளித்த விளக்கத்தில், 25.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி நடப்பதால் வரும் 31-ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என விளக்கம் அளித்திருக்கிறார். இன்று வனத்துறை அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள். 

கடந்த 2015-ம் ஆண்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தென்காசியிலிருந்து புளியரை வழியாக கொட்டாரக்கரா செல்வதற்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறிச் சென்றார். புளியரை வந்தபோது பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக அவர் கீழே விழுந்தார். அதில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றார். இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து எடுத்தது. அந்த விசாரணை இன்று நடந்தது. அப்போது ஆஜரான போக்குவரத்து அதிகாரிகள், அப்போது இருந்த அதிகாரி ஓய்வு பெற்று விட்டதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிகாரிகள் அளித்த விளக்கத்தை ஏற்க இயலவில்லை. அதனால், அந்த வழக்கு ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீதிபதி ஜெயச்சந்திரன்

பொள்ளாச்சி விவகாரத்தில், புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குத் தமிழக அரசு மாற்ற உத்தரவிட்டிருக்கிறது. அதனால் உண்மை வெளிவந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மாநில மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்டிருப்பது தவறானது. அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  விவகாரத்தில் காவல்துறை உரிய விதத்தில் செயல்படாவிட்டால், ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும்’’ எனத் தெரிவித்தார். 


[X] Close

[X] Close