20 நிமிடத்துக்காகக் காட்டப்பட்ட கெடுபிடி... - முகத்தை மூடியே அழைத்துச் செல்லப்பட்ட திருநாவுக்கரசு! | medical check up for pollachi sex abuse accused thirunavukarasu

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (15/03/2019)

கடைசி தொடர்பு:22:15 (15/03/2019)

20 நிமிடத்துக்காகக் காட்டப்பட்ட கெடுபிடி... - முகத்தை மூடியே அழைத்துச் செல்லப்பட்ட திருநாவுக்கரசு!

பொள்ளாச்சி

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கைக் கடந்த புதன்கிழமை முதல் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. திருநாவுக்கரசை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நாகரஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  இன்று காலையே திருநாவுக்கரசு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர்களும், தி.மு.க மகளிர் அணியும் கூடியிருந்தனர். மக்கள் கடும் கோபத்தில் இருப்பதால், திருநாவுக்கரசை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக நீதிபதி நாகராஜிடம் கோவை மாநகரக் காவல் துறையினர் முறையீடு செய்தனர். இதனால், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் காவல் துறையினர் கோரிக்கை வைத்தனர். காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, திருநாவுக்கரசு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். சி.பி.சி.ஐ.டி தரப்பில் பத்து நாள்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில், திருநாவுக்கரசை நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். 

இதனிடையே, திருநாவுக்கரசை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தியதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ``ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு ஓர் வழக்கில் குற்றவாளிகளை நேரில்தான் ஆஜர்படுத்த வேண்டும். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. மேலும், காவலில் எடுத்து விசாரிப்பதற்கு முன்பு, குற்றவாளியை நேரில் ஆஜர்படுத்துவது அவசியம். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துவது வழக்கின் போக்கை மாற்றிவிடும்’’ என்று வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ``நீதிமன்றம் வரும் வழியில் குற்றவாளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கூறியது. அதனால்தான் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தினார்கள்’’ என்றார்.

இந்த நிலையில், திருநாவுக்கரசை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் இன்று மாலை அழைத்து வந்தனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கும் கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. திருநாவுக்கரசை பொது நுழைவு வாயில் வழியாக அழைத்து வராமல் மாற்றுப் பாதையில் அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, உடனடியாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். பொதுவாக இதுபோன்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது முகத்தை மறைத்துக்கொண்டுதான் செல்வார்கள். திருநாவுக்கரசு அவ்வாறு இல்லாமல் இயல்பாகவே இருந்தார். போலீஸார் வலுக்கட்டாயமாக அவரது முகத்தை மூடிப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.  


[X] Close

[X] Close