பறக்கும் படையிடம் சிக்கிய 3 லட்சம் ரூபாய் - கரூரில் எலெக்சன் ஏற்பாடுகள் தீவிரம்! | 3 lakh rupees seized by election flying squad in karur

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (16/03/2019)

கடைசி தொடர்பு:07:20 (16/03/2019)

பறக்கும் படையிடம் சிக்கிய 3 லட்சம் ரூபாய் - கரூரில் எலெக்சன் ஏற்பாடுகள் தீவிரம்!

கரூர் மாவட்டத்தில் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3,52,210 பணம் பறிமுதல் செய்யப்பட்டது’’ என்று தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான அன்பழகன் தெரிவித்தார்.

தேர்தல் பறக்கும் படை

அடுத்த மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதையொட்டி, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால், மாவட்டம்தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, உரிய ஆவணம் இல்லாமல் 50,000-க்கு மேல் பணம் எடுத்துப்போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பம்பாளையம் மற்றும் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதூர் ஆகிய இடங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3,52,210 பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ``மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதூர் சோதனைச் சாவடியில் கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் ஆர்.குமார், சிறப்பு சார் ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1,92,210 ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பம்பாளையம் என்ற பகுதியில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் ராஜவேல், சிறப்பு சார் ஆய்வாளர் ராமையா ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆணவங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1,60,000 ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உரிய ஆணவங்களைச் சம்பந்தப்பட்ட நபர்கள் சமர்பிக்கும் பட்சத்தில் அவர்களின் தொகை திருப்பி அளிக்கப்படும். இதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா தலைமையில் மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


[X] Close

[X] Close