`தம்பிதுரையை வீழ்த்தணும்; களப்பணிதான் முக்கியம்!`- தி.மு.க-வினரை முடுக்கிவிடும் செந்தில் பாலாஜி | Senthil balaji preparing dmk executives for loksabha election

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (16/03/2019)

கடைசி தொடர்பு:13:59 (16/03/2019)

`தம்பிதுரையை வீழ்த்தணும்; களப்பணிதான் முக்கியம்!`- தி.மு.க-வினரை முடுக்கிவிடும் செந்தில் பாலாஜி

தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படும் என்று கருதப்பட்ட கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வசம் போயிருக்கிறது. `காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் ஜோதிமணிதான்' என்று எல்லா தரப்பும் சொல்லும் நிலையில், ``களப்பணியால்தான் 10 சதவிகிதம் வாக்குகளை நமக்கு சார்பா மாற்ற முடியும்" என்று தி.மு.கவினரை முடுக்கிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

ஜோதி மணி

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக தி.மு.க-வுக்குத் தாவினார். `கரூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியை தி.மு.க-வுக்கே சாதகமாக்குகிறேன்' என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்தபிறகே, செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு வந்ததாக சொல்லப்பட்டது. அ.தி.மு.க-வில் இருந்தபோது தனது வளர்ச்சியை பூஜ்ஜியமாக்கிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரது அரசியல் வாழ்வை குழித்தோண்டி புதைப்பேன் என்ற சபதத்தோடு செயல்படத் தொடங்கினார்.

தம்பிதுரை

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் மற்றும் கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு தோதாக பூத் கமிட்டி அமைத்து, நேர்த்தியாக கூட்டம் நடத்தினார். அதைப் பார்த்து அசந்த ஸ்டாலின் அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை வாரி வழங்கினார். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட, காங்கிரஸ் தரப்புக்கு தி.மு.க கூட்டணியில் கரூர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தரப்பில், `பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவரும், கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளருமான ஜோதிமணிக்குதான் இந்த முறை சீட்' என்று அடித்துச் சொல்கிறார்கள். `கரூர் தொகுதி காங்கிரஸுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அக்னிப் பரீட்சை' என்று நினைக்கிறாராம் செந்தில்பாலாஜி.

செந்தில் பாலாஜி

கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி,  ``அ.தி.மு.க வேட்பாளராக களம் இறங்க இருக்கிற தம்பிதுரையை நாம் அனைவரும் சேர்ந்து வீழ்த்த வேண்டும். கூட்டணிக் கட்சியென எண்ணாமல், காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பகுதிகளில் அ.தி.மு.கவைவிட நாம் 50,000 வாக்குகள் அதிகம் பெற வேண்டும். அரவக்குறிச்சி சட்டமன்ற இடைதேர்தலுக்கான வெற்றியை இப்போதே உறுதிசெய்ய வேண்டும். என்னதான் கூட்டணி பலம், கட்சிகளின் வாக்கு வங்கி, சின்னம், வேட்பாளர் என்று பல சாதக விஷயங்கள் இருந்தாலும், களப்பணிகள் மூலமே 10 சதவிகித வாக்குகளை நமக்கு சாதகமாக மாற்ற முடியும். எனவே, ஊருக்கு முன்பே இப்போதே களப்பணிகளைத் தொடங்குங்கள்" என்று பேசி உற்சாகப்படுத்தி இருக்கிறார்.


[X] Close

[X] Close