``உங்க எம்.பி. யாருன்னு சொல்ல முடியுமா?" - ஊராட்சி சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி! | Did you know your mp name? Question raised by Kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/03/2019)

கடைசி தொடர்பு:13:59 (16/03/2019)

``உங்க எம்.பி. யாருன்னு சொல்ல முடியுமா?" - ஊராட்சி சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி!

``இந்த தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யாருன்னு சொல்ல முடியுமா. அவரைப் பார்த்திருக்குறீங்களா. உங்க எம்.பி.யோட பெயரை சரியாச் சொல்வோருக்கு பரிசுத் தொகை வழங்கும் நிலைதான்  இங்கு உள்ளது" என தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

கிராம சபை கூட்டத்தில் பேசும் கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம்,  வல்லநாட்டில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். 
இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். குடிநீர் பிரச்னை, சாலை வசதி, ரேஷன்கடை, குடிநீர் மேல்நிலைத் தேக்கத் தொட்டி வசதி கோரி அப்பகுதி மக்கள்  பல்வேறு மனுக்களை கனிமொழியிடம் கொடுத்தனர். 

கிராம சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்கும் கனிமொழி

இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட கனிமொழி பேசுகையில், ``நீங்கள் கூறுவதில் மிக அதிகமான பிரச்னை உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலே முடிந்துவிடும். அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்த பயந்து வருகிறது. கருணாநிதி, பத்திரிகையில் மக்கள் குறை குறித்து செய்தி வந்தாலே போதும் உடனே அதிகாரிகளை போனில் கூப்பிட்டு உடனே அந்தப் பிரச்னையை முடித்து விடுவார். ஆனால், தற்போது மக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து மனு அளிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளாத நிலையே உள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க அரசு, பா.ஜ.க-வுக்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்னை முதல்  ஸ்டெர்லைட் பிரச்னை வரை அனைத்துக்கும் காரணம் அ.தி.மு.கதான். அவர்களை மன்னிக்கவே கூடாது. முந்தைய தி.மு.க ஆட்சிக் காலங்களில் இந்த ஊராட்சிகளுக்கு தி.மு.க செய்த நலத்திட்டங்கள், கட்டப்பட்ட கட்டடங்கள், பள்ளிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆனால்,  கடந்த 8 வருடமா அ.தி.மு.க ஆட்சி நடத்தி வருது.  மக்களுக்கு எதாவது செய்தாங்கன்னு சொல்ல முடியுமா? 

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள்

கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு மேலாக உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரே இல்லா ஒரு நிலை நீடித்து வந்துள்ளது.  இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யாருன்னு சொல்ல முடியுமா. அவரைப் பார்த்திருக்குறீங்களா. உங்க எம்.பி.யோட பெயரைச் சரியாச்  சொல்வோருக்கு பரிசு தொகை வழங்கும் நிலைதான்  இங்கு உள்ளது. வருகிற தேர்தலில் மத்தியில் பா.ஜ.க-வை விரட்ட வேண்டும் என்ற கொள்கையோடு முடிவோடு  நீங்கள் வாக்களிக்க வேண்டும். 

கிராம சபை கூட்டத்தில் கனிமொழி

3 தொகுதியில் இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். ஆட்சியில் இருந்தாலும் ஆட்சி பொறுப்பிலே இல்லாவிட்டாலும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

தொடர்ந்து செக்காரக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், ``இப்பகுதிகளில் உள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர்,  ராணுவத்தில்தான் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டைப் பாதுகாக்கும் பணிக்காக ராணுவத்தில் தேர்வாக தங்களைத் தயார்படுத்தும்  இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து,  ஆழ்வார்கற்குளம், கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை ஆகிய ஊராட்சிசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close