`உயிருக்கு உயிராய் காதலித்தேன்; அவள மறக்க முடியல மேடம்!' - இன்ஸ்பெக்டரிடம் கதறிய எம்.பி.ஏ பட்டதாரி | I can't forget her madam, Mba degree holder says to inspector

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (16/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (16/03/2019)

`உயிருக்கு உயிராய் காதலித்தேன்; அவள மறக்க முடியல மேடம்!' - இன்ஸ்பெக்டரிடம் கதறிய எம்.பி.ஏ பட்டதாரி

 பட்டதாரி ஜெயபிரகாஷ்

`அவளை உயிருக்கு உயிராய் காதலித்தேன், என்னால் அவளை மறக்க முடியவில்லை. அதனால்தான் அப்படி மிரட்டினேன்' என்று ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் கதறிய எம்.பி.ஏ. பட்டதாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். 

ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் பட்டதாரி பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நான் படித்தேன். அப்போது என்னுடன் படித்தவர் திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ். இருவரும் நட்பாகப் பழகினோம். அப்போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக ஜெயபிரகாஷ் மிரட்டுகிறார்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சோபாராணி விசாரணை நடத்தினார். ஜெயபிரகாஷிடம் நடந்த விசாரணையில் அவர் உண்மைகளைத் தெரிவித்தார். அதில், `அவளை உயிருக்கு உயிராய் காதலித்தேன். அவளை என்னால் மறக்க முடியவில்லை. என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவளிடம் கெஞ்சினேன். அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. இதனால்தான் நாம் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியில் விடுவேன் என்று கூறினேன். அப்போதாவது என்னை அவள் திருமணம் செய்துகொள்வாள் என்று நம்பினேன்' என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். 

  பட்டதாரி காதலர்கள்

ஜெயபிரகாஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெயபிரகாஷ், எம்.பி.ஏ படித்துமுடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அவர் படிக்கும் காலத்தில் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். அந்தப் பெண்ணும் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பெண் மனம் மாறியுள்ளார். ஆனால் ஜெயபிரகாஷ், அந்தப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால்தான் ஜெயபிரகாஷை கைது செய்துள்ளோம்'' என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பொள்ளாச்சி சம்பவத்தில் காதல் வலையில் பெண்கள், மாணவிகள் ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்டனர். ஏமாற்றப்பட்ட பெண்களிடம் வீடியோக்களை காண்பித்து பணம், நகைகளை வழிப்பறியில் அந்தக் கும்பல் ஈடுபட்டது. ஆனால், ஆவடி சம்பவத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக வீடியோ, புகைப்படங்கள் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பொள்ளாச்சி சம்பவத்துக்கும் இந்தச் சம்பவத்துக்கும் வித்தியாசம் உள்ளது. விருப்பம் இல்லாத பெண்ணுக்கு ஜெயபிரகாஷ் தொல்லை கொடுத்த காரணத்தால் சிறைக்கம்பிகளை அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார்'' என்றனர். 


[X] Close

[X] Close