மீனவர் வலையில் சிக்கிய கடற்பசுகள்! - கர்ப்பிணி கடற்பசு உயிரிழந்த பரிதாபம் | walrus death near pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (16/03/2019)

கடைசி தொடர்பு:13:50 (16/03/2019)

மீனவர் வலையில் சிக்கிய கடற்பசுகள்! - கர்ப்பிணி கடற்பசு உயிரிழந்த பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கிய இரண்டு கடற்பசுக்களில் ஆண் கடற்பசு பத்திரமாக மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. பெண் கடற்பசு பரிதாபமாக உயிரிழந்தது.

மீனவர் வலையில் சிக்கிய கர்ப்பிணி கடற்பசு உயிரிழந்த பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆதிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சேக்தாவுத். மீனவரான இவர் இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். அப்போது, அவரது வலையில் பெரிய அளவிலான மீன் சிக்கியதாக நினைத்து சந்தோஷத்துடன் காலை கரைக்குத் திரும்பினார். ஆனால், வலையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் காணப்படும் அபூர்வ வகை வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட உயிரினமான கடற்பசுக்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேக்தாவுத் சக மீனவர்கள் உதவியுடன் தனது வலையில் சிக்கிய ஆண் கடற்பசுவை பத்திரமாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர். வலையில் சிக்கிய மற்றொரு பெண் கடற்பசுவை மீட்க முடியாமல் பரிதவித்தனர்.

இதையடுத்து, கடலோர காவல் படையினருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் மதுமகேஷ் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கடலோர காவல்படை அலுவலர் ரகுபதி உள்ளிட்ட கடலோர காவல் படையினர் சென்று வலையில் சிக்கிய 10 அடி நீளம் மற்றும் 500 கிலோ எடையும் கொண்ட பெண் கடற்பசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பெண் கடற்பசு பரிதாபமாக உயிரிழந்தது.

இறந்த கடற்பசுவை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில், பெண் கடற்பசு கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்டியை அறுவைசிகிச்சை மூலம் எடுத்து கடலுக்குள் விடும் முயற்சியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்காக, பெண் கடற்பசுவின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருக்கும் குட்டியை அறுவைசிகிச்சை மூலம் உயிருடன் மீட்கும் பணியை கால்நடை மருத்துவர் குழு மேற்கொண்டது. ஆனாலும்,  குட்டியும் இறந்து போனது. தாயையும், குட்டியையும் கடற்கரையில் குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


[X] Close

[X] Close